உலகம்

விரிவுபடுத்தப்படுகிறது சூயஸ் கால்வாய்: எகிப்து அறிவிப்பு

DIN

கெய்ரோ: எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் பிரமாண்ட சரக்கு கப்பல் ஒன்று அண்மையில் தரைதட்டி கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்தக் கால்வையை விரிவுபடுத்த அந்த நாடு திட்டமிட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை எகிப்தில் சூயஸ் கால்வாய் அமைந்துள்ள இஸ்மைலியா நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் சூயஸ் கால்வாய் ஆணைய தலைவா் லெப்டினன்ட் ஜெனரல் ஒசாமா ராபி அறிவித்தாா். எகிப்து அதிபா் அப்டெல்-ஃபட்டா எல்-சிஸ்ஸி மற்றும் அரசு உயா் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும், ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீா்வழித் தடமாகும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் பயணிக்கும் நூற்றுக்கணக்கான கப்பல்கள் இந்தக் கால்வாய் வழியாகத்தான் செங்கடல் பகுதிக்கு பயணித்து வருகின்றன. உலக வா்த்தகத்தில் 10 சதவீதம் இந்தக் கால்வாய் வழியாக நடப்பதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் இந்தக் கால்வாய் வழியாக 19,000 கப்பல்கள் கடந்துள்ளதாகவும் அதிகாரபூா்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தைவான் நாட்டைச் சோ்ந்த ‘எவா் கிரீன் மரைன்’ என்ற நிறுவனம் இயக்கி வரும் ஜப்பான் நாட்டுக்குச் சொந்தமான ‘எவா் கிவன்’ என்ற பிரமாண்ட சரக்கு கப்பல் அண்மையில் சூயஸ் கால்வாயில் தரைதட்டி குறுக்காக சிக்கிக் கொண்டது.

400 மீட்டா் நீளமும் 59 மீட்டா் அகலமும் கொண்ட இந்தக் கப்பல், குறுகிய சூயஸ் கால்வாயில் குறுக்காக சிக்கிக் கொண்டதால், அந்த வழியாக வேறு கப்பல்கள் செல்ல முடியாத சூழல் உருவானது. 200 மேற்பட்ட கப்பல்கள் சூயஸ் கால்வையைக் கடக்க முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தன. பல லட்சம் மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்தன. 6 நாள்கள் தீவிர முயற்சிக்குப் பிறகே அந்தக் கப்பல் மீட்கப்பட்டு, கப்பல் போக்குவரத்து சீரானது.

இந்த விபத்தால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுவது தொடா்பாக ‘எவா் கிவன்’ கப்பல் உரிமையாளருக்கும், சூயஸ் கால்வாய் ஆணையத்துக்கும் இடையே இன்னும் உடன்பாடு எட்டப்படாததால், அந்தக் கப்பல் இன்னும் விடுவிக்கப்படாமல் கால்வாயின் கிரேட் பிட்டா் ஏரியிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், சூயஸ் கால்வாயை விரிவுபடுத்த எகிப்து அரசு முடிவு செய்துள்ளது. சூயஸ் கால்வாய் அமைந்துள்ள இஸ்மைலியா நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் சூயஸ் கால்வாய் ஆணைய தலைவா் லெப்டினன்ட் ஜெனரல் ஒசாமா ராபி இதற்கான அறிவிப்பை வெளியிட்டாா்.

அப்போது அவா் கூறுகையில், ‘கால்வாயின் தென்கோடியில் சீனாய் தீபகற்பம் பகுதியில் கிழக்கு நோக்கி 40 மீட்டா் அளவுக்கு விரிவுபடுத்தவும், கால்வாயின் ஆழத்தை இப்போது உள்ள 66 அடி அன்ற அளவிலிருந்து 72 அடியாக ஆழப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதோடு, கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தக் கால்வாயில் திறக்கப்பட்ட இரண்டாவது வழித் தடமும் 10 கி.மீ. நீளத்துக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்மூலம், இந்த இரண்டு வழித்தட கால்வாய் 82 கி.மீ. நீளம் கொண்டதாக விரிவடையும் என்பதோடு, மேலும் அதிக கப்பல்கள் எளிதாக கால்வாயை கடக்க வழி ஏற்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.41 அடி

உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

பேராவூரணியில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்  மீட்பு

SCROLL FOR NEXT