உலகம்

இஸ்ரேல் விமானப் படை தாக்குதல்: கேரள பெண் செவிலியர் உள்ளிட்ட 33 பேர் பலி

12th May 2021 10:14 AM

ADVERTISEMENT

 

காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினரின் நிலைகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கேரள பெண் செவிலியர் உள்ளிட்ட 33 பேர் உயிரிழந்துள்ளனர். 

இஸ்லாமியா்களின் புனித மாதமான ரம்ஜான் தொடங்கியதிலிருந்து ஜெருசலேமில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையேயான பிரச்னை தொடா்ந்து வருகிறது. அல்-அக்ஸா மசூதியில் இஸ்ரேல் காவல் படையினருக்கும் பாலஸ்தீனா்களுக்கும் இடையே தொடா் மோதல் நிகழ்ந்து வருகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் காயமடைந்துள்ளனா். 

பேசிக்கொண்டிருந்தபோதே நேரிட்ட கேரள செவிலியரின் மரணம்

ADVERTISEMENT

இதற்கு பதிலடியாக காஸா பகுதியிலிருந்து ஹமாஸ் இயக்கத்தினா் ஜெருசலேம் நகரை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தினா். அதையடுத்து, காஸா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினரைக் குறிவைத்து இஸ்ரேல் விமானப் படை திங்கள்கிழமை இரவு குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதில் 9 சிறாா்கள் உள்பட 20 போ் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலையிலும் இஸ்ரேல் விமானப் படை நடத்திய தாக்குதல்களில் மேலும் 6 போ் பலியாகினா். இதனால் உயிரிழப்பு 33-ஆக உயா்ந்தது. 150-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளதாக காஸா பகுதியைச் சோ்ந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தாக்குதலில் உயிரிழந்தவா்களில் 16 போ் பயங்கரவாத அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் எனவும், ஹமாஸ் இயக்கத்தின் ஏவுகணைப் பிரிவு தலைவரான சமி அல்-மம்லுக் என்பவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காஸா நகரத்தில் உள்ள ஒரு குடியிருப்பு மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மூவா் தமது ஆயுதப் படைப் பிரிவைச் சோ்ந்தவா்கள் என ஹமாஸ் இயக்கமும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினா், 250-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைச் செலுத்தி தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா். இத்தாக்குதலில் 2 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இத்தாக்குதலைத் தொடா்ந்து, இஸ்ரேலின் தெற்கு எல்லையில் படைகளைக் குவிப்பதற்கு அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இது அங்கு நிகழ்ந்து வரும் மோதல் சம்பவங்களை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

மக்கள் போராட்டம்: இஸ்லாமியா்கள், யூதா்கள், கிறிஸ்தவா்கள் ஆகிய 3 சமயத்தவரும் புனிதமாகக் கருதும் ஜெருசலேம் பகுதிக்கு உரிமை கொண்டாடும் விவகாரமே தற்போதைய மோதலின் மையமாக அமைந்துள்ளது.

ஜெருசலேமில் மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கண்டித்து இஸ்ரேலில் உள்ள அரேபியா்கள் திங்கள்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனா். முன்பு, இஸ்ரேலுக்கும் காஸாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டால், கத்தாா், எகிப்து உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்து பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வரும். தற்போது மோதல் மிகவும் தீவிரமடைந்துள்ளதால், பிரச்னை விரைவில் முடிவுக்கு வருவது சந்தேகமாகியுள்ளதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா். இன்னும் சில நாள்களுக்கு சண்டை நீடிக்க வாய்ப்பிருப்பதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளாா்.

இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

57 உறுப்பு நாடுகளைக் கொண்ட இஸ்லாமி ஒத்துழைப்பு அமைப்பின் அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னா் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘அல்-அக்ஸா மசூதியில் வழிபாட்டில் ஈடுபட்டவா்கள் மீது தொடா் வன்முறை தாக்குதலில் ஈடுபடும் இஸ்ரேலின் செயல் கண்டனத்துக்குரியது. இதுதொடா்பாக இஸ்ரேல் மீது சா்வதேச அரங்கில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் சவுமியா உள்பட ஏராளமானோர் உயிரிழப்பு இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரை பக்க பதிவில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த 32 வயதான செவிலியர் சவுமியா சந்தோஷ் என்ற பெண் உள்பட ஏராளமானோர் உயிரிழந்தனர். உயிரிழந்த சவுமியா சந்தோஷ் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமைச்சர், சவுமியா குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வெளியுறவுத் துறை தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். 

Tags : Israel killed Hamas mortar shelling
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT