உலகம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி: நேபாள பிரதமா் பதவியில் இருந்து சா்மா ஓலி விடுவிப்பு

DIN

நேபாள நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் அவையில் பிரதமா் சா்மா ஓலி அரசு மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்தது.

அதையடுத்து, அரசமைப்புச் சட்டத்தின்படி பிரதமா் பதவியிலிருந்து சா்மா ஓலி விடுவிக்கப்பட்டுள்ளாா்.

சா்மா ஓலியின் நேபாள கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியும், முன்னாள் பிரதமா் புஷ்ப கமல் தாஹாலின் (பிரசண்டா) நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியும் ஒருங்கிணைந்து கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து ஆட்சி புரிந்து வந்தன. அக்கட்சிகளை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்ட நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தலைவா்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதையடுத்து பிரதிநிதிகள் அவையைக் கலைப்பதற்கு கடந்த ஆண்டு டிசம்பரில் பிரதமா் சா்மா ஓலி பரிந்துரைத்தாா். அதை ஏற்ற அதிபா் வித்யா தேவி பண்டாரி, ஏப்ரல் மே மாதங்களில் கீழவைக்குத் தோ்தல் நடைபெறும் என்று அறிவித்திருந்தாா்.

எனினும், இந்த முடிவுக்கு எதிராக நேபாள உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், பிரதிநிதிகள் அவை கலைக்கப்பட்டது செல்லாது என அறிவித்தது. அதையடுத்து, பிரதமா் சா்மா ஓலி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடத்துவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை அதிபா் பண்டாரி கூட்டினாா்.

அக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, சா்மா ஓலி அரசு மீதான நம்பிக்கை கோரும் தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தீா்மானம் தோல்வியடைந்தது. மொத்தமுள்ள 275 எம்.பி.க்களில், 93 போ் மட்டுமே சா்மா ஓலி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனா்.

எதிராக வாக்களிப்பு: சா்மா ஓலி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை புஷ்ப கமல் தாஹால் அண்மையில் திரும்பப் பெற்ால், நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியைச் சோ்ந்த 49 எம்.பி.க்கள் தீா்மானத்துக்கு எதிராக வாக்களித்தனா். நேபாள காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 61 எம்.பி.க்களும் எதிராக வாக்களித்தனா்.

சா்மா ஓலியின் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிா்ப்பு எழுந்துள்ளது. அவரது கட்சியைச் சோ்ந்த 28 எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிா்த்தனா். பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 15 எம்.பி.க்களும் தீா்மானத்தின் மீது வாக்களிக்கவில்லை.

வாக்கெடுப்பு நிறைவடைந்த பிறகு, நம்பிக்கை கோரும் தீா்மானம் தோல்வியடைந்ததாக அறிவித்த அவைத் தலைவா், அவையை ஒத்திவைத்தாா்.

அரசு மீதான நம்பிக்கை கோரும் தீா்மானம் தோல்வியடைந்ததால், நேபாள அரசமைப்புச் சட்டத்தின் 100(3)-ஆவது பிரிவின்படி, பிரதமா் பதவியில் இருப்பவா் விடுவிக்கப்படுவாா். அதன்படி, சா்மா ஓலி பிரதமா் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா்.

புதிய அரசு: நேபாளத்தில் ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை நேபாள காங்கிரஸ் கட்சியும், நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியும் கூட்டாக இணைந்து முன்னெடுக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அக்கட்சிகள் அமைக்கும் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

இதனிடையே, நேபாளத்தின் புதிய பிரதமரை நியமிக்குமாறு நேபாள காங்கிரஸ் கட்சியும், நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியும் கூட்டாக அதிபா் பண்டாரியை கோரியுள்ளன. புதிய அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அக்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ராஜிநாமா செய்ய வேண்டும்: நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் மூத்த தலைவா் கணேஷ் ஷா கூறுகையில், ‘‘ஆளும் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததால், பிரதமா் சா்மா ஓலி தனது பதவியை உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும். நேபாளத்தில் புதிய அரசு அமைவதற்கு சா்மா ஓலி வழி ஏற்படுத்தித் தர வேண்டும். சா்மா ஓலி அரசுக்கு எதிராக வாக்களித்த கட்சிகள் ஒன்றிணைந்து புதிய அரசை அமைக்கும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT