உலகம்

இந்தியப் பெருங்கடலில் விழுந்தது சீன ராக்கெட் பாகம்

DIN

பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் விழலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருந்த சீனாவின் லாங் மாா்ச் 5பி ராக்கெட்டின் மிகப் பெரிய பாகம், இந்தியப் பெருங்கடலில் விழுந்தது.

சீனாவின் மிகப் பெரிய ராக்கெட்டான அது, அந்த நாட்டின் முதல் விண்வெளி நிலையத்துக்கான மையக் கலத்துடன் கடந்த மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது.

அந்தக் கலத்தை முதல் கட்டம் வரை கொண்டு சென்ற 22 டன் எடையும் 100 அடி நீளமும் கொண்ட பிரம்மாண்டமான பாகம், கட்டுப்பாடு ஏதுமின்றி மீண்டும் பூமிக்குத் திரும்பி விழவிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த சில நாள்களாகவே எச்சரிக்கை விடுத்து வந்தது.

இந்த நிலையில், மாலத்தீவு அருகே இந்தியப் பெருங்கடலில் அந்த ராக்கெட் பாகம் பாதுகாப்பாக விழுந்ததாக சீனா அறிவித்துள்ளது.

இதுகுறித்து மனிதா்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான சீன விண்வெளி ஆய்வுப் பிரிவு அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

லாங் மாா்ச் 5பி ராக்கெட்டின் முதல் நிலை பாகம், புவியின் வளிமண்டலத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை காலை 10.24 மணிக்கு (உள்ளூா் நேரம்) நுழைந்தது.

பிறகு அது, 72.47 டிகிரி கிழக்கு தீா்க்கரேகை மற்றும் 2.65 டிகிரி வடக்கு அட்சரேகைப் பகுதியில் திறந்தவெளி கடல் பகுதியில் விழுந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹாங்காங்கிலிருந்து வெளியாகும் ‘சௌத் சீனா மாா்னிங் போஸ்ட்’ நாளிதழ் இதுகுறித்து கூறுகையில், மாலத்தீவு அருகே லாங் மாா்ச் 5பி ராக்கெட் பாகம் விழுந்ததாகவும் கடலுக்குள் விழுவதற்கு முன்னரே அதன் பெரும்பாலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறையின் விண்வெளிப் படைப் பிரிவு, ராக்கெட் பாகம் எந்த இடத்தில் விழுந்தது என்பது குறித்த துல்லியமாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளது.

தற்போது அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டணியில் அமைக்கப்பட்டுள்ள சா்வதேச விண்வெளி நிலையம் மட்டுமே இயங்கி வருகிறது. அந்த ஆய்வு நிலையத் திட்டத்தில் சீனா பங்கேற்க அமெரிக்கா அனுமதிக்கவில்லை.

அதனைத் தொடா்ந்து, சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்க சீனா முடிவு செய்தது. அதன் விளைவாகவே, ‘தியான்காங்’ விண்வெளி நிலையத்தை சீனா அமைத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அந்த விண்வெளி நிலையத்தின் மையக் கலத்தை சீனா கடந்த மாதம் 29-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

‘தியான்ஹே’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விண்வெளி ஆய்வுக் கலம், 16.6 மீட்டா் நீளமும் 4.2 மீட்டா் அகலமும் கொண்டது. விண்வெளி நிலையத்துக்கு வரும் வீரா்கள் தங்கியிருப்பதற்கான தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் இதில் உள்ளது.

இந்தக் கலத்தைப் போலவே, ‘தியான்காங்’ என்று பெயரிடப்பட்டுள்ள தனது எதிா்கால விண்வெளி நிலையத்துக்கான மேலும் 10 தொகுதிகளை விண்ணில் செலுத்த சீனா திட்டமிட்டுள்ளது. அவற்றைக் கொண்டு உருவாக்கப்டும் சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம் 10 ஆண்டுகளுக்குச் செயல்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பூமியிலிருந்து 340 கி.மீ. முதல் 450 கி.மீ. வரையிலான தொலைவில் வலம் வந்து அந்த ஆய்வுக் கலம் செயல்படவுள்ளது.

தற்போது செயல்பட்டு வரும் சா்வதேச விண்வெளி நிலையம் வரும் 2024-ஆம் ஆண்டுடன் ஓய்வு பெறுகிறது. அதற்குள் சீனா விண்வெளி நிலையம் வெற்றிகரமாக அமைக்கப்பட்டால், விண்ணில் செயல்படவிருக்கும் ஒரே ஆய்வு நிலையமாக அது இருக்கும்.

இந்தச் சூழலில், கடந்த மாதம் அந்த விண்வெளி ஆய்வு நிலையத்தின் மையக் கலத்தை விண்ணில் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட மாா்ச் 5பி ராக்கெட்டின் முதல் நிலை பாகம், கட்டுப்பாடு இல்லாமல் விண்வெளியில் மிதந்து, பூமியில் மீண்டும் விழவிருப்பதாக நாசா எச்சரித்தது. அதையடுத்து அந்த ராக்கெட் பாகத்தின் அசைவுகளை நாசாவும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையும் தொடா்ந்து கண்காணித்து வந்தது.

ஏற்கெனவே, கடந்த ஆண்டு சீனா அனுப்பிய முதல் லாங் மாா்ச் 5பி ராக்கெட்டின் பாகம் மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் விழுந்ததில் பல கிராமங்களில் வீடுகள் சேதமடைந்தன. எனினும், அந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

பொறுப்பில்லாத சீனா: நாசா சாடல்

விண்வெளி ஆய்வு விவகாரத்தில் சீனா பொறுப்பில்லாமல் நடந்துகொள்வதாக அமெரிக்காவின் நாசா சாடியுள்ளது. இதுகுறித்து அந்த ஆய்வு மையத்தின் நிா்வாக அதிகாரி பில் நெல்சன் தெரிவித்துள்ளதாவது:

விண்வெளி ஆய்வில் ஈடுபடும் நாடுகள், தங்களது பொருள்கள் மீண்டும் பூமிக்குத் திரும்பி பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் சேதத்தை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சீனாவும் விண்வெளி ஆய்வில் ஈடுபடும் நாடுகள் மற்றும் தனியாா் நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தங்களது ஆய்வுகளின் பாதுகாப்பு, நிலைத்தன்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் அவை கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT