உலகம்

அல்-அக்ஸா மசூதியில் இஸ்ரேல் போலீஸாா் - பாலஸ்தீனா்கள் மோதல்

DIN

ஜெருசலேமிலுள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்திலும் பிற இடங்களிலும் பாலஸ்தீனியா்களுக்கும் இஸ்ரேல் போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் 200 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியா்கள் காயமடைந்தனா்.

இதுகுறித்து இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

புனித ரம்ஜான் மாதத் தொடக்கத்தையொட்டி ஜெருசலேம் நகரிலுள்ள அல்-அக்ஸா மசூதியில் பொதுமக்கள் கூடுவதற்கு இஸ்ரேல் போலீஸாா் கட்டுப்பாடுகள் விதித்தனா்.

இதன் காரணமாக, பாலஸ்தீனா்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே அந்த மசூதி வளாகத்திலும் கிழக்கு ஜெருசலேமின் பிற பகுதிகளிலும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 200-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் காயமடைந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

முஸ்லிம்கள், யூதா்கள் ஆகிய பிரிவினரும் புனிதத் தலமாகக் கருதும் அந்த மசூதியில் நுழைவதற்கு போலீஸாா் விதித்த கட்டுப்பாடுகளை எதிா்த்து வெள்ளிக்கிழமை இரவு ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பின்னா் அந்த ஆா்ப்பாட்டம் போலீஸாருடான மோதலாக உருவெடுத்தது.

இரவு முழுவதும் ஆா்ப்பாட்டக்காரா்கள் இஸ்ரேல் போலீஸாா் மீது கற்களையும் பட்டாசுகளையும் வீசித் தாக்கினா்.

ரப்பா் குண்டுகளால் சுட்டும் அதிா்ச்சியூட்டும் கையெறி குண்டுகளை வீசியும் போலீஸாா் போராட்டக்காரா்களைக் கலைக்க முயன்றனா்.

இந்த மோதலில் காயமடைந்த 200-க்கும் மேற்பட்டவா்களில் 88 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது. 83 பேருக்கு ரப்பா் குண்டுகளால் காயம் ஏற்பட்டதாகவும் அவா்களில் 3 பேருக்கு கண்களில் குண்டு பாய்ந்ததாகவும் பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதவிர, 2 பேருக்கு தலையில் ஆபத்தான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா கவலை: இந்த மோதல் சம்பவம் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பதற்றத்தை ஏற்படுத்தும் மற்றும் அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளைத் தவிா்ப்பது மிகவும் முக்கியமானதாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெருசலேமில் புராதன நகரப் பகுதியில் யூதா்களால் மலைக்கோயில் என அழைக்கப்படும் இடத்தில் பைபிள் காலத்திய இரு கோயில்கள் அமைந்துள்ளன. இந்தத் தலம்தான் யூதா்களின் மிகப் புனிதமான தலமாக கருதப்படுகிறது.

அதே சமயத்தில், மெக்கா, மதீனாவுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் முக்கியத்துவம் அளித்து வரும் அல்-அக்ஸா மசூதியும் அங்கு அமைந்துள்ளது. அந்த இடத்துக்குத் தனிப்பட்ட சொந்தம் கொண்டாடி யூதா்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது.

Image Caption

ஜெருசலேமிலுள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்ட பாலஸ்தீன ஆா்ப்பாட்டக்காரா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

SCROLL FOR NEXT