உலகம்

சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த சரக்குக் கப்பல் மீட்பு: தகவல்

29th Mar 2021 02:55 PM

ADVERTISEMENT

 

எகிப்தின் சூயஸ் கால்வாய் குறுக்கே சிக்கி, சா்வதேச கடல்வணிகப் போா்க்குவரத்துக்குத் தடை ஏற்படுத்திவந்த பிரம்மாண்ட சரக்குக் கப்பல் மீட்கப்பட்டதாக கடல்வழி சேவை வழங்கும் இன்ச்கேப் தெரிவித்துள்ளது. 

உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பாதையை ஒரு வார காலத்துக்கும் மேலாக முடக்கி வைத்திருந்த எவர் கிவன் சரக்குக் கப்பலின் ஒரு பகுதி நீரில் மிதந்ததாக இன்று காலை தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கப்பல் முழுவதுமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பான் நிறுவனத்துக்குச் சொந்தமான, பனாமா கொடியேற்றிய ‘எவா் கிவன்’ என்ற அந்தக் கப்பல், ஆசியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு சரக்குப் பெட்டகங்களை ஏற்றிக் கொண்டு சூயஸ் கால்வாய் வழியாக கடந்த செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, திடீரென குறுக்கே திரும்பி பக்கவாட்டில் சிக்கிக் கொண்டது.

ADVERTISEMENT

இதனால், உலகின் 12 சதவீத வா்த்தகத்துக்குப் பயன்படுத்தப்படும் அந்தக் கால்வாயில் போக்குவரத்து தடைபட்டது. எவா் கிவன் கப்பலை நேராகத் திருப்பி போக்குவரத்தை சரிசெய்ய முயற்சி ஒரு வார காலமாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று கப்பல் மீட்கப்பட்டுள்ளது.

தொடர் முயற்சிகளின் காரணமாக சரக்குக் கப்பல் மிதக்கத் தொடங்கியிருந்தாலும், அந்தப் பாதையில் எப்போது கப்பல் போக்குவரத்துத் தொடங்கும் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. மேலும், அப்பாதையில் பல நாள்களாக நின்றிருக்கும் 450க்கும் மேற்பட்ட கப்பல்களுக்கான பாதைகளை சீரமைக்க எத்தனை நாள்கள் ஆகும் என்பதும் தெரியவரவில்லை.

சரக்குக் கப்பல் சிக்கியிருந்த பகுதியில் 27 ஆயிரம் சதுர மீட்டர் அளவுக்கு 18 மீட்டர் ஆழத்துக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது.

ஒருவேளை செவ்வாய்க்கிழமை வரை, சரக்குக் கப்பல் மீட்கப்படாவிட்டால், அதிலிருந்த சரக்குகளை இறக்க எகிப்து காலக்கெடு நிர்ணயித்திருந்தது. இந்த மீட்புப் பணியில், சரக்குக் கப்பலின் முன்பகுதி சேதமடைந்துள்ள போதிலும், அதன் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூயஸ் கால்வாயின் பக்கவாட்டில் சிக்கிக் கொண்ட கப்பலை விடுவிக்க, மேலும் இரு இழுவைப் படகுகள் அந்தப் பகுதிக்கு வரைவழைக்கப்பட்டு, கப்பலை இழுக்கும் பணிகள் நேற்று தொடங்கியதன் பயனாக, கப்பலின் ஒரு பகுதி இன்று காலை மெல்ல நீரோட்டத்தில் மிதக்கத் தொடங்கியது. தொடர் மீட்புப் பணி நடைபெற்று வந்த நிலையில், கப்பல் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

திங்கள்கிழமைக்குள் கப்பலை மிதக்கவிடும் வகையில் தொடர்ந்து பணியாளர்கள் செயல்பட்டு வருவதாக சூயஸ் கால்வாய் அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT