உலகம்

பருவநிலை உச்சிமாநாடு: உலகத் தலைவர்கள் பங்கேற்க அமெரிக்கா அழைப்பு

27th Mar 2021 12:14 PM

ADVERTISEMENT

ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பருவநிலை மெய்நிகர் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட 40 நாடுகளின் உலகத் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் சமீப காலத்தில் அதிகம் பேசுபொருளாகி உள்ளன. காலநிலை மாற்றத்தால் அதீத வெப்பம், சீரற்ற வானிலை, மழைப்பொழிவில் மாற்றம் என முன்னெப்போதும் இல்லாத பாதிப்புகள் உணரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஏப்ரல் மாதம் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் காலநிலை மாற்றம் குறித்த பருவநிலை மெய்நிகர் உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் புதைபடிம எரிபொருள்கள் பயன்பாடு, காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலையைக் குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கையின் மூலம் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 

இந்த மெய்நிகர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா உள்ளிட்ட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த ஆண்டு நவம்பரில் கிளாஸ்கோவில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டிற்கான முக்கிய மைல்கல்லாக இந்த உச்சி மாநாடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் பாரீஸ் பருவநிலை உடன்படிக்கையில் அமெரிக்கா மீண்டும் இணைவதாக அறிவித்து இணைந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT