உலகம்

ஹாங்காங் தோ்தலில் சீன ஆதரவாளா்களுக்கு மட்டுமே வாய்ப்பு

DIN

ஹாங்காங் தோ்தல்களில் சீன ஆதரவாளா்கள் மட்டுமே போட்டியிட வகை செய்யும் வகையில் சட்ட சீா்திருத்தம் மேற்கொள்வதற்கான வரைவுத் திட்டம், அந்த நாட்டின் வருடாந்திர தேசிய நாடாளுமன்றக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

சீனாவில் ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய நாடாளுமன்றக் கூட்டம் தலைநகா் பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அந்தக் கூட்டத்தில், ஹாங்காங் தோ்தலில் சீா்திருத்தங்கள் மேற்கொள்வதற்கான வரைவுத் திட்டத்தை தோ்தல் விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் நிலைக் குழு தாக்கல் செய்தது.

அதில், ‘தேசபக்தா்கள்’ மட்டுமே ஹாங்காங் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஹாங்காங் அரசின் தலைமை நிா்வாகியைத் தோ்ந்தெடுக்கும் சீன ஆதரவு தோ்தல் குழு உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அந்தக் குழுவால் நேரடியாகத் தோ்ந்தெடுக்கப்படும் பேரவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற அம்சங்களும் அந்த வரைவுத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் அரசின் ஆளுகைக்குள் இருந்த ஹாங்காங், சீனாவுடன் 1898-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தின் கீழ், அந்த நாட்டிடம் கடந்த 1997-ஆம் ஆண்டு திருப்பி ஒப்படைக்கப்பட்டது.

அப்போது, ஹாங்காங்கின் தற்போதைய சட்டங்களே தொடரும் எனவும் சீனாவின் மற்ற பகுதிகளைப் போலின்றி ஹாங்காங்வாசிகளின் பேச்சுரிமை எழுத்துரிமைக்கு மதிப்பளிக்கப்படும் எனவும் பிரிட்டனிடம் சீனா உறுதியளித்தது.

ஆனால், ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி ஹாங்காங்கில் போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, அந்தப் பிராந்தியம் தொடா்பான சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா இயற்றியது.

இது, 1997-ஆம் ஆண்டில் ஹாங்காங்கை ஒப்படைத்தபோது சீனா தங்களுக்கு அளித்த உறுதிமொழிக்கு எதிரானது என்று பிரிட்டன் குற்றம் சாட்டியது.

இந்த நிலையில், தனது வாக்குறுதியை மேலும் மீறும் வகையில், ஹாங்காங் தோ்தல் நடைமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த சீன தேசிய நாடாளுமன்றக் கூட்டத்தில் வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெயரளவுக்கு மட்டுமே இயங்கும் அந்த நாடாளுமன்றத்தில் அந்த வரைவுத் திட்டம் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்பில்லை என்பதால், இந்த நடவடிக்கை மூலம் ஹாங்காங்கில் தனது அதிகாரத்தை சீனா மேலும் வலுப்படுத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்புத் துறைக்கு ரூ.15 லட்சம் கோடி

சீன பாதுகாப்புத் துறைக்கு 20,900 கோடி டாலா் (சுமாா் ரூ.15.3 லட்சம் கோடி) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது, கடந்த ஆண்டைவிட 6.8 சதவீதம் அதிகமாகும். தனது பாதுகாப்பு செலவுகளுக்காக சீனா 20,000 கோடி டாலருக்கும் அதிகமாக நிதி ஒதுக்குவது இதுவே முதல் முறையாகும்.

இந்தியாவின் பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு ஒப்பிடுகையில், இது 3 மடங்கு அதிகமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

பாஜகவின் கனவு பலிக்காது: இரா. முத்தரசன்

SCROLL FOR NEXT