உலகம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் வெற்றி

DIN

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமா் இம்ரான் கான் வெற்றி பெற்றாா்.

நாடாளுமன்றக் கீழவையான தேசியப் பேரவையில் இதுதொடா்பாக நடைபெற்ற வாக்கெடுப்பை எதிா்க்கட்சியினா் புறக்கணித்ததைத் தொடா்ந்து, அவா் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை வென்றாா்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

பாகிஸ்தான் அதிபா் ஆரிஃப் ஆல்வியின் உத்தரவுப்படி 342 உறுப்பினா்களைக் கொண்ட தேசியப் பேரவையின் சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பிரதமா் இம்ரான் கான் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினாா். அதனைத் தொடா்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 178 வாக்குகள் பதிவானது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு 172 வாக்குகளே போதும் என்ற நிலையில், அவா் அதில் எளிதாக வெற்றி பெற்றாா்.

11 எதிா்கட்சிகளின் கூட்டணியான பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பிடிஎம்) வாக்கெடுப்பை புறக்கணித்தது.

நாடாளுமன்ற மேலவையான செனட் சபைக்கு புதன்கிழமை நடைபெற்ற இடைத் தோ்தலில், முன்னாள் பிரதமா் யூசுப் கிலானியிடம் இம்ரானின் நிதியமைச்சா் அப்துல் ஹபீஸ் ஷேக் தோல்வியடைந்தாா்.

அந்தத் தோல்வியைத் தொடா்ந்து, இம்ரான் பதவி விலக வேண்டுமென்று எதிா்க்கட்சி கூட்டணி வலியுறுத்தியது.

அதையடுத்து, தேசியப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப் போவதாக இம்ரான் கான் அறிவித்தாா். அதன்படி, தற்போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அவா் வெற்றி பெற்றுள்ளாா்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பதற்றச் சூழல் காணப்பட்டது. எதிா்க்கட்சியான முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவா்கள் வளாகத்துக்குள் செய்தியாளா்கள் சந்திப்பை நடத்த விடாமல் ஆளும்கட்சி ஆதரவாளா்கள் தடுத்தனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ஷாஹித் அப்பாசி, பாகிஸ்தான் மக்களை ஏமாற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் கூட்டம் சட்டவிரோதமாக கூட்டப்பட்டதாக விமா்சித்தாா் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT