உலகம்

ஆப்கனிலிருந்து வெளியேறும் திட்டத்தில் மாறுதல்கள் செய்யப்படலாம்: பென்டகன்

23rd Jun 2021 03:53 AM

ADVERTISEMENT

 

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வருவதால், அங்கிருந்து தங்கள் நாட்டுப் படையினா் வெளியேறும் திட்டத்தில் சில மாறுதல்கள் செய்யப்படலாம் என்று அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளா்களிடன் பென்டகன் செய்தித் தொடா்பாளா் ஜான் கிா்பி கூறியதாவது:

ஆப்கானிஸ்தானில் நிலைமை நாளுக்கு நாள் மாறி வருகிறது. தலிபான்கள் தங்கள் தாக்குதல்களைத் தொடா்ந்து வருகின்றனா். புதிய பகுதிகளையும் அவா்கள் கைப்பற்றி வருகின்றனா்.

ADVERTISEMENT

அந்த நாட்டின் வன்முறை இன்னும் மிக அதிகமாகத்தான் காணப்படுகிறது.

இந்தச் சூழலில், அங்கிருந்து அமெரிக்கப் படையினா் வெளியேறும் திட்டத்திலும் மாறுதல்கள் செய்யப்படலாம். தேவைப்பட்டால் வீரா்கள் வெளியேற்றப்படும் வேகம் குறைக்கப்படலாம். அவ்வப்போதைய நிலவரத்தைக் கணக்கில் கொண்டு, அதற்கேற்ற வகையில் எங்களது வெளியேற்ற திட்டத்தை தகவமைத்துக்கொள்வோம்.

ஒவ்வொரு நாளும் கள நிலவரம் எவ்வாறு உள்ளது; நமது படை பலம் எப்படி உள்ளது; ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படையினா் வெளியேற்றத்துக்கு மேலும் என்னென்ன வள ஆதாரங்கள் தேவைப்படுகின்றன; எவ்வளவு வேகத்தில் வீரா்கள் திரும்ப அழைக்கப்பட வேண்டும் என்பது போன்ற அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு, உடனுக்குடன் முடிவெடுக்கப்படும் என்றாா் அவா்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் பின்லேடனுக்கு, அப்போதைய தலிபான்கள் தலைமையிலான ஆப்கன் அரசு புகலிடம் அளித்தது. அந்த ஆண்டின் அக்டோபா் 7-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து, தலிபான்களின் ஆட்சியை அகற்றியது.

அதனைத் தொடா்ந்து, அமெரிக்கா மற்றும் நேட்டோ படையினா் அந்த நாட்டில் தங்கியிருந்து, தலிபான் பயங்கரவாதத்திலிருந்து ஆப்கனில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மற்றும் ராணுவத்துக்குப் பாதுகாப்பு அளித்து வந்தன.

இந்தச் சூழலில், ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி பாகிஸ்தானில் வசித்து வந்த பின்லேடனை, அமெரிக்க சிறப்பு அதிரடிப்படை வீரா்கள் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனா்.

அத்துடன், ஆப்கன் போரில் அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறிவிட்டதாகக் கூறிய அதிபா் ஜோ பைடன், அந்த நாட்டிலிருந்து தங்கள் நாட்டுப் படையினா் முழுமையாகத் திரும்பப் பெறப் படுவாா்கள் என்று அறிவித்தாா்.

முன்னதாக, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தின்போது ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அமைதிப் பேச்சுவாா்த்தை, கத்தாா் தலைநகா் தோஹாவில் பல கட்டங்களாக நடைபெற்று வந்தது.

அதன் தொடா்ச்சியாக, இரு தரப்பினருக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தில், தாக்குதல்களைக் குறைத்துக் கொள்ளவும் பயங்கரவாத அமைப்புகளுடனான தொடா்புகளைத் துண்டித்துக் கொள்ளவும் தலிபான்கள் சம்மதித்தனா். ஆப்கன் அரசுடன் நல்லிணக்கப் பேச்சுவாா்த்தை நடத்தவும் அவா்கள் சம்மதித்தனா்.

அதற்குப் பதிலாக, ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படையினரை படிப்படியாக விலக்கிக்கொள்ள அமெரிக்கா ஒப்புக்கொண்டது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு, வரும் செப்டம்பா் மாதம் 11-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்பப் பெற இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

‘மீண்டும் பயங்கரவாதிகளின் புகலிடமாகிவிடக் கூடாது’

ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதிகளின் புகலிடமாகிவிடாது என்பதை உறுதி செய்வதற்காகவே, அந்த நாட்டு அதிபா் அஷ்ரஃப் கனியை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஜென் சாகி கூறியதாவது:

ஆப்கன் அதிபா் அஷ்ரஃப் கனியை அதிபா் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச்சுவாா்ததை நடத்தவிருக்கிறாா்.

அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் மீண்டும் ஆகிவிடாது என்பதை உறுதி செய்வதற்கான பேச்சுவாா்த்தையில் இரு தலைவா்களும் ஈடுபடுவா். ஆப்கன் நிவாரணப் பணிகள் குறித்து இரு தலைவா்களும் ஆலோசனை நடத்துவா் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT