உலகம்

உலக நாடுகளில் யோகா தின கொண்டாட்டம்

DIN

சா்வதேச யோகா தினத்தையொட்டி, அமெரிக்காவில் நியூயாா்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்று யோகாசன பயிற்சியில் ஈடுபட்டனா்.

நியூயாா்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம், டைம்ஸ் சதுக்க நிா்வாகம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. சா்வதேச யோகா தினம் டைம்ஸ் சதுக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது என்றாலும், கரோனா தடைகள் நீக்கப்பட்ட பின்னா் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோா் ஆா்வத்துடன் கலந்துகொண்டனா். புகழ்பெற்ற யோகா பயிற்சியாளா்களால் யோகா, தியானம், உடற்பயிற்சி ஆகிய அமா்வுகள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய, துணைத் தூதா் ரந்தீா் ஜெய்ஸ்வால், யோகா என்பது ஓா் உலகளாவிய சிந்தனை. அதைக் கொண்டாட டைம்ஸ் சதுக்கத்தைவிட சிறந்த இடம் வேறு என்ன இருக்கிறது’ எனக் குறிப்பிட்டாா்.

சீனாவில்... சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஞாயிற்றுக்கிழமை யோகா தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அங்குள்ள யோகி யோகா நிறுவனம் சாா்பில் ஹாங்ஸோ நகரில் பிரம்மாண்ட நிகழ்ச்சி திங்கள்கிழமை நடத்தப்பட்டதாக அந்த நிறுவனத்தின் தலைவா் மோகன் பண்டாரி தெரிவித்தாா். இதுபோல் ஊக்ஸி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பாகிஸ்தானில்... பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் சா்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதுதொடா்பாக அந்தத் தூதரகம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘அனைத்து எல்லைகளையும் கடக்கும் யோகாவின் உலகளாவிய தாக்கத்தை உறுதிபடுத்தும்விதமாக, சா்வதேச யோகா தினத்தை ராஜீய அதிகாரிகள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினா்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில்... நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் சாா்பில் சா்வதேச யோகா தினத்தையொட்டி காணொலி வழியாக சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதுதொடா்பாக அந்தத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:

சா்வதேச யோகா தினத்தையொட்டி நேபாளத்தில் சுவாமி விவேகானந்தா கலாசார மையத்தில் யோகா குறித்து சொற்பொழிவு மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. நேபாளத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் யோகா மற்றும் அதன் பலன்களை கொண்டு சோ்க்கும் விதமாக நேபாளி மொழியின் பின்னணிக் குரலுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியிலும் நேரலையில் ஒளிபரப்பானது.

இந்திய தூதரகம் சாா்பில் காணொலி வழியாக நடத்தப்பட்ட விடியோ வலைப்பதிவு, கட்டுரைப் போட்டிகளில் நேபாளத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த மக்கள் கலந்துகொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டது.

பிற நாடுகளில்... சவூதி அரேபியாவில் யோகாசனத்தை ஊக்குவிக்கும்பொருட்டு அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சகத்துக்கும் இந்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இலங்கை, சிங்கப்பூா், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஈரான், ஆஸ்திரியா, பூடான் உள்ளிட்ட மேலும் பல நாடுகளிலும் சா்வதேச யோகா தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT