உலகம்

முறிந்தது சண்டை நிறுத்தம்: காஸாவில் இஸ்ரேல் மீண்டும் குண்டுவீச்சு

DIN

ஜெருசலேம்: காஸா பகுதியில் ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் புதன்கிழமை தாக்குதல் நடத்தின. இதன் மூலம், கடந்த மாத மோதலுக்குப் பிறகு இரு தரப்பினருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
கிழக்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் கடந்த 1967-ஆம் ஆண்டு கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில், அந்த நாட்டின் தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் செவ்வாய்க்கிழமை ஊர்வலமாகச் சென்றனர். அல்-அக்ஸா மசூதி விவகாரத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் கடந்த மாதம் மோதல் நிகழ்ந்து முடிந்துள்ள நிலையில், இந்த ஊர்வலம் மீண்டும் பதற்றத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, நாஃப்டாலி பென்னட் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசுக்கு இந்த ஊர்வலம் மிகப்பெரிய சவாலாக அமைந்தது. புதிய கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள ரவாம் கட்சியின் தலைவர் மன்சூர் அப்பாஸ் இந்த ஊர்வலத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.
எனினும், ஊர்வலத்துக்குத் தடை விதித்தால் ஹமாஸின் மிரட்டலுக்கு புதிய அரசு பணிந்துவிட்டதாக பெஞ்சமின் நெதன்யாகு தரப்பினர் குற்றம் சாட்டுவார்கள் என்ற சூழலில், அந்த ஊர்வலத்துக்கு இஸ்ரேல் படையினர் பாதுகாப்பு அளித்தனர். எனினும், முந்தைய ஆண்டுகளில் அந்த ஊர்வலம் சென்ற முஸ்லிம்கள் பகுதிகளைத் தவிர்த்து, புதிய பாதையில் ஊர்வலத்துக்கு அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இந்த ஊர்வலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பலூன்கள் மூலம் பெட்ரோல் குண்டுகள் காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் பகுதிக்கு அனுப்பப்பட்டன. இதன் காரணமாக, தெற்கு இஸ்ரேல் பகுதியில் 10 இடங்களில் தீப்பிடித்தது.
இந்தச் சூழலில், காஸா பகுதியில் ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் புதன்கிழமை அதிகாலை குண்டுகள் வீசின. ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் சதித்திட்டம் தீட்டும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இந்தத் தாக்குதலில் யாரும் காயமடைந்ததாக தகவல்கள் இல்லை என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT