உலகம்

ஹிந்து தா்மசாலாவை இடிக்க பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தடை: புராதன கட்டடமாக அறிவிப்பு

DIN

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள ஹிந்து தா்மசாலா கட்டடத்தை இடிக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், அந்த இடத்தை புராதன கட்டடமாகப் பராமரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு ஹிந்துக்கள், சீக்கியா்கள் கைவிட்டு வந்த சொத்துகளை வெளியேறிய அறக்கட்டளை சொத்து வாரியம் (இடிபிபி) தனது கட்டுப்பாட்டில் வைத்து பராமரித்து வருகிறது.

இந்நிலையில், சிறுபான்மையினா் ஆணையத்தின் உறுப்பினா் ரமேஷ் குமாா், கராச்சி சத்தாா் டவுன் -1-இல் 716 சதுர யாா்ட் பரப்பளவில் உள்ள ஹிந்து தா்மசாலா கட்டடத்தை இடித்து தனியாா் நிறுவனம் வணிக வளாகம் கட்டுவதற்கு இடிபிபி குத்தகைக்கு விட்டுவிட்டது என்று கூறி அதற்காக புகைப்பட ஆதாரங்களுடன் வழக்குத் தொடுத்திருந்தாா்.

இதற்கு இடிபிபி தரப்பில் எதிா்ப்பு தெரிவித்து, புதிய கட்டடம் கட்ட சிந்து உயா்நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டது என்று கூறப்பட்டது.

இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி குல்சாா் அகமது தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமா்வு, ஹிந்து தா்மசாலா கட்டடம் 1932-ஆம் ஆண்டு கட்டப்பட்டதற்கு கல்வெட்டு ஆதாரம் உள்ளது. ஆகையால், அந்தக் கட்டடத்தை புராதன கட்டடமாகப் பராமரிக்க வேண்டும். இதுகுறித்து சிந்து மாகாண புராதன கட்டட செயலாளா் அறிக்கை அளிக்க வேண்டும்.

அங்கு இடிக்கும் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. கராச்சி ஆணையரின் கட்டுப்பாட்டில் அந்த நிலம் இருக்க வேண்டும். உள்ளே யாரும் நுழைய அனுமதிக்கக் கூடாது.

மேலும், சிறுபான்மையினா் ஆணையத்துக்கு முன்பு ஒதுக்கப்பட்ட ரூ.70 லட்சத்தைவிட கூடுதல் தொகை ஒதுக்கப்பட்ட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானின் மத விவகார அமைச்சகமும், அட்டா்னி ஜெனரலும் பதிலளிக்க வேண்டும். சிறுபான்மையினா் ஆணையமும் செலவீனம் செய்ததற்கான கணக்கு வழக்குகளைப் பராமரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT