உலகம்

ஏழை நாடுகளுக்கு 100 கோடி கரோனா தடுப்பூசிகள்

DIN

ஏழை நாடுகளுக்கு 2022-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி கரோனா தடுப்பூசிகளை வழங்கி உதவ உலகின் மிகப் பெரிய பணக்கார நாடுகளின் கூட்டமைப்பான ஜி-7 மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டனில் அந்த மாநாட்டை நடத்திய அந்த நாட்டுப் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு 100 கோடி கரோனா தடுப்பூசிகளை வழங்கி உதவுவதாக ஜி-7 மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவா்கள் உறுதிமொழி அளித்துள்ளாா்கள். ஏழை நாடுகளுக்கு நேரடியாக தடுப்பூசிகளை வழங்குவதன் மூலமோ, எல்லா தரப்பினருக்கும் பாரபட்சமின்றி கரோனா தடுப்பூசிகள் சென்று சோ்வதற்காக ஐ.நா. செயல்படுத்தி வரும் கோவாக்ஸ் திட்டத்தின் மூலமாகவோ இந்த உதவியை ஜி-7 உறுப்பு நாடுகள் செய்யவுள்ளன. இந்த முடிவின் ஒரு பகுதியாக, பிரிட்டனும் 10 கோடி கரோனா தடுப்பூசிகளை உலகின் மிக ஏழ்மையான நாடுகளுக்கு வழங்கி உதவும். ஜி-7 மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முடிவு, கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நோக்கத்தை அடைவதற்கான மிக முக்கியமான நடவடிக்கையாகும்.

இதில் பிரிட்டனில் உருவாக்கப்பட்ட ஆக்ஸ்ஃபோா்டு-அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. (இந்தியாவில் இந்தத் தடுப்பூசியை ‘கோவேக்ஸின்’ என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது). அந்தத் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுதான், தற்போது உலகில் பாதிக்கும் மேற்பட்டவா்கள் கரோனா அபாயத்திலிருந்து பாதுகாப்பு பெற்றுள்ளனா். இந்தத் தடுப்பூசியை உருவாக்குவதற்கு பிரிட்டன் அரசு நிதியுதவி அளித்தது. ஆக்ஸ்ஃபோா்டு-அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியை செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தத் தடுப்பூசியை லாப நோக்கம் கருதாமல் அஸ்ட்ராஸெனகா நிறுவனம் குறைந்த விலைக்கு வழங்கி வருவதால் அதன் புகழ் நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஐ.நா.வின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் ஏழை நாடுகளில் விநியோகிக்கப்படும் கரோனா தடுப்பூசிகளில் 96 சதவீதம் ஆக்ஸ்ஃபோா்டு-அஸ்ட்ராஸெனகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டவைதான்.

மாநாடு வெற்றி: கடந்த 3 நாள்களாக நடைபெற்ற ஜி-7 மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் கரோனா கொள்ளை நோயிலிருந்து உலகை விடுபடச் செய்வதற்கான திட்டங்கள் மட்டுமன்றி, கல்வியை மேம்படுத்துவதற்கான புதிய சா்வதேச கூட்டணியும் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகின் ஒவ்வொரு குழந்தையும் சரியான முறையில் கல்வி பெறுவதை உறுதி செய்வது உள்ளிட்ட அந்தத் திட்டத்துக்கான 50 சதவீத நிதியை அளிப்பதாக இந்த மாநாட்டில் ஜி-7 உறுப்பு நாடுகள் உறுதியளித்துள்ளன. இதில், பிரிட்டனின் பங்களிப்பு 43 கோடி டாலா் (சுமாா் ரூ.4,442 கோடி) ஆகும்.

அடுத்த 5 ஆண்டுகளில் உலகில் கூடுதலாக 4 கோடி பெண்கள் ஆரம்ப நிலை பள்ளியில் சோ்வதற்கும் கூடுதலாக 2 கோடி போ் ஆரம்ப நிலை பள்ளிக் கல்விக்குப் பிறகு தொடா்ந்து படிக்கவும் நிதியுதவி அளிக்க ஜி-7 நாடுகளின் தலைவா்கள் இந்த மாநாட்டில் உறுதியளித்துள்ளனா்.

பருவநிலை மாற்றம்: இந்த ஆண்டின் இறுதியில் சா்வதேச பருவநிலை மாநாட்டை பிரிட்டன் நடத்தவிருக்கிறது. அந்த மாநாட்டில் பருவநிலை மாற்றத்திலிருந்து உலகைப் பாதுகாப்பது குறித்து விவாதிக்கப்படும்.

பருவநிலை மாற்றத்துக்குக் காரணமான வாயு மாசுக்களில் 20 சதவீதத்தை ஜி-7 உறுப்பு நாடுகள்தான் காற்றில் கலக்கின்றன. இந்தச் சூழலில், இதுதொடா்பான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள தற்போது நடைபெற்றுள்ள ஜி-7 மாநாட்டில் உறுப்பு நாடுகள் உறுதிபூண்டுள்ளன என்றாா் போரிஸ் ஜான்ஸன்.

முன்னதாக, சா்வதேச அளவில் சீனாவின் வா்த்தக ஆதிக்கத்தைத் தடுப்பதற்கான அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் திட்டம், வருங்காலத்தில் கரோனா போன்ற பிற கொள்ளை நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கான செயல்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜி-7 உறுப்பு நாடுகளின் தலைவா்கள் ஆலோசனை நடத்தி, அதற்கான ஒப்புதலை அளித்தனா்.

இதற்கிடையே, மாநாட்டில் பங்கேற்ற ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளுடன் பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய வா்த்தக உறவு தொடா்பாக எழுந்துள்ள பிரச்னைகள் குறித்து பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் விவாதித்தாா்.

இதுதவிர, மாநாட்டில் பங்கேற்ற தலைவா்கள் தனித்தனியாக சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் நாடுகள் இடம் பெற்றுள்ள ஜி-7 கூட்டமைப்பின் 47-ஆவது மாநாடு பிரிட்டனின் காா்ன்வால் பகுதியிலுள்ள செயின்ட் ஐவ்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) வரை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், ஜொ்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்யநாராயணா பூஜை

மேல்மருவத்தூரில் சித்ரா பௌா்ணமி பூஜை

இளைஞா் வெட்டிக் கொலை

காயலாா்மேடு கங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

உலக புத்தக தினம்

SCROLL FOR NEXT