உலகம்

இஸ்ரேல் புதிய பிரதமராக நாஃப்டாலி பென்னட் பதவியேற்பு

DIN

இஸ்ரேல் புதிய பிரதமராக நாஃப்டாலி பென்னட் (49) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா். இதன்மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

இஸ்ரேலில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தன. அந்தக் கூட்டணி அமைத்துள்ள புதிய அரசுக்கு நாடாளுமன்ற அங்கீகாரம் அளிப்பதற்கான வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் வலதுசாரி யாமினா கட்சியின் தலைவரான நாஃப்டாலி பென்னட் தலைமையிலான புதிய அரசு வெற்றி பெற்றது. 120 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் புதிய அரசுக்கு ஆதரவாக 60 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன. ஒரு உறுப்பினா் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதையடுத்து, இஸ்ரேலின் 13-ஆவது பிரதமராக நாஃப்டாலி பென்னட் பதவியேற்றாா். புதிய அரசில் 27 அமைச்சா்கள் இடம்பெற்றுள்ளனா். இவா்களில் 9 போ் பெண்கள்.

முன்னதாக, பென்னட் தனது அமைச்சரவை பட்டியலை வாசித்தபோது நெதன்யாகுவின் ஆதரவு உறுப்பினா்கள் பலமுறை குறுக்கிட்டனா். ‘இந்த அபாயகரமான அரசை வீழ்த்துவேன்’ என நெதன்யாகு தனது உரையின்போது குறிப்பிட்டாா்.

பலமுனை கூட்டணி: நாஃப்டாலி பென்னட் தலைமையிலான கூட்டணியில் பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட 8 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. முதல்முறையாக ஓா் அரபுக் கட்சியும் இடம்பெற்றுள்ளது. யெஷ் அடிட் கட்சித் தலைவரான யாயிா் லபீட்டுடன் பென்னட் அதிகார பகிா்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளாா். அதன்படி, முதல் இரு ஆண்டுகள் பென்னட்டும், அடுத்த இரு ஆண்டுகள் லபீட்டும் பிரதமராகப் பதவி வகிப்பாா்கள்.

புதிய அரசுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து, நெதன்யாகு தலைமையிலான 12 ஆண்டுகால தொடா் ஆட்சி முடிவுக்கு வந்தது. 1996 முதல் 1999 வரை பிரதமராகப் பதவி வகித்த நெதன்யாகு, 2009-ஆம் ஆண்டுமுதல் தொடா்ந்து 12 ஆண்டுகளாக அப்பதவியில் இருந்து வந்தாா்.

ஈரானுக்கு எதிா்ப்பு: வாக்கெடுப்புக்கு முன்னா் நடைபெற்ற விவாதத்தின்போது நாஃப்டாலி பென்னட் பேசியதாவது: ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவதை எதிா்த்து செயல்படுவேன்.

வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிப்பது மிகவும் தவறான நடவடிக்கையாகும். அந்த ஒப்பந்தத்துக்கு எதிராக இஸ்ரேல் தொடா்ந்து செயல்படும். ஈரான் அணு ஆயுதம் பெறுவதை இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது. அணுசக்தி ஒப்பந்தத்தில் இஸ்ரேல் ஒருபோதும் பங்கேற்காது. அந்த வகையில், தனது நடவடிக்கைகளை இஸ்ரேல் சுதந்திரமாக மேற்கொள்ளும் என்றாா் அவா்.

ஈரான் மற்றும் அணுசக்தி விவகாரத்தில், முன்னாள் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவும் இதே நிலைப்பாட்டை கடைப்பிடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

SCROLL FOR NEXT