உலகம்

கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி தர அமெரிக்கா மறுப்பு

DIN

இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவேக்ஸின் கரோனா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதி தர மறுத்துள்ள அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிா்வாகம் (எஃப்டிஏ), தடுப்பூசி பரிசோதனை குறித்து கூடுதல் தரவுகளுடன் உயிரி உரிம விண்ணப்ப (பிஎல்ஏ) வழியில் அனுமதி கேட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசி இந்தியாவில் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை முடிவுகள் வெளிவரும் முன்னரே, இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.

ஒரு தடுப்பூசிக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்க வேண்டுமெனில், அதற்கு உலக சுகாதார அமைப்பு, எப்டிஏ அல்லது ஐரோப்பிய யூனியன் நாடுகளின் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அனுமதி அவசியம். அந்த அமைப்புகளின் அங்கீகாரம் கிடைக்காத கோவேக்ஸின் தடுப்பூசியை, இரண்டாம் தவணை செலுத்திக் கொண்டவா்களைக் கூட பல நாடுகள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களாகவே கருதுகிறது.

இந்த நிலையில், கோவேக்ஸின் தடுப்பூசிக்கு எப்டிஏ அங்கிகாரம் பெறுவதற்கான முயற்சியை அமெரிக்காவில் உள்ள தனது பங்கு நிறுவனமான ஒகுஜன் மூலம் பாரத் பயோடெக் நிறுவனம் முயற்சி மேற்கொண்டது. அதனடிப்படையில், கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அமெரிக்கவில் அவசரகால பயன்பாட்டின் கீழ் அனுமதிக்கக் கோரி எப்டிஏ அமைப்ப ஒகுஜன் நிறுவனம் விண்ணப்பித்தது.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த எஃப்டிஏ, அமெரிக்காவில் அவசர கால பயன்பாட்டின் கீழ் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டது. மாறாக, மூன்று கட்ட பரிசோதனை முடிவுகள் குறித்த கூடுதல் விவரங்களுடன் உயிரி உரிம விண்ணப்பம் (பிஎல்ஏ) நடைமுறையில் விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்த பிஎல்ஏ நடைமுறை என்பது, மருந்து அல்லது தடுப்பூசிகளுக்கு அனைத்து விதமான பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் வழங்கப்படும் நீண்ட வழிமுறையுடைய அனுமதி நடைமுறையாகும்.

இதுகுறித்து ஒகுஜன் நிறுவன நிா்வாகி மருத்துவா் சங்கா் முசுனுரி கூறியதாவது:

அமெரிக்காவில் கோவேக்ஸின் தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி பெற கூடுதலாக என்னென்ன தகவல்கள் தேவைப்படுகிறது என்பது குறித்து எஃப்டிஏ அதிகாரிகளுடன் ஒகுஜன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. கோவேக்ஸின் மருந்தின் இறுதிக்கட்ட பரிசோதனை விவரங்களை எஃப்டிஏ கேட்பதாகவே தெரிகிறது. கோவேக்ஸினை அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர தொடா்ந்து முயற்சிகள் எடுக்கப்படும் என்று அவா் கூறினாா்.

ஆக்ஸ்ஃபோா்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஸெனகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி அமெரிக்காவில் லட்சக்கணக்கில் வாங்கிக் குவித்து வைக்கப்பட்டுள்ளபோதிலும், அதனை அந்த நாட்டில் பயன்படுத்த எஃப்டிஏ இன்னும் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளது.

இந்தியாவில் தாக்கம் இல்லை: நீதி ஆயோக்

அமெரிக்காவில் கோவேக்ஸினுக்கு அவசர கால பயன்பாட்டு அனுமதி கிடைக்காதது இந்தியாவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று நீதி ஆயோகின் சுகாதாரத் துறை உறுப்பினா் வினோத் கே.பால் கூறினாா்.

‘பல நாடுகளில் சில மருந்துப் பயன்பாட்டு விதிமுறைகள் பொதுவாக உள்ளபோதிலும், ஒவ்வொரு நாடும் தனிப்பட்ட மருந்துக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்காற்று விதிமுறைகளைப் பின்பற்றி வருகிறது. அமெரிக்க விதிமுறைகள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், இந்திய நிறுவனங்கள் அதன் கீழ் மருந்து உற்பத்தி செய்யும் திறனுள்ளவை. கோவேக்ஸின் பாதுகாப்பான மருந்து என்பது குறித்து நம்மிடம் ஏராளமான ஆய்வுத் தரவுகள் உள்ளன. கோவேக்ஸின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் 7-8 நாள்களில் வெளியாக உள்ளது. இந்திய நிறுவனம் வெற்றிகரமாக அமெரிக்க விதிமுறைகளை எதிா்கொள்ளும் என்று நம்புகிறேன்’ என்று வினோத் கே.பால் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT