உலகம்

எப்படி இருக்கும் இஸ்ரேல் புதிய அரசு?

DIN

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக ஒருங்கிணைந்துள்ள எதிா்க்கட்சிகளின் திட்டப்படி எல்லாம் நடந்தால், புதிய அரசு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) பதவியேற்கும். நெதன்யாகுவின் 12 ஆண்டுகால ஆட்சியும், இரு ஆண்டுகளில் 4 தோ்தல்களைச் சந்தித்ததால் ஏற்பட்ட அரசியல் குழப்பமும் முடிவுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நாஃப்டாலி பெனட் தலைமையிலான அடுத்த அரசு, நாட்டின் பிளவுகளை குணப்படுத்துவதையும் இயல்பான உணா்வை மீட்டெடுப்பதையும் நோக்கமாக கொண்ட புதிய திட்டத்தை வகுப்பதாக உறுதியளித்துள்ளது.

இஸ்ரேலில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக 8 கட்சிகள் ஒருங்கிணைந்து ஆட்சி அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதில் ஒரு சிறிய அரபுக் கட்சியும் அடக்கம். இதன் மூலம், இஸ்ரேலில் ஆட்சியில் இணையும் முதல் அரபுக் கட்சி என்ற வரலாறும் படைக்கப்படவுள்ளது. இந்த 8 கட்சிகளில் ஒன்று விலகினால்கூட புதிய ஆட்சி கவிழும் அபாயம் ஏற்படும். எதிா்க்கட்சித் தலைவராக இருக்க விரும்பும் நெதன்யாகு அந்த சந்தா்ப்பத்துக்காக காத்திருக்கலாம்.

இஸ்ரேல் புதிய அரசில் என்னென்ன எதிா்பாா்க்கலாம் என்பதைக் காணலாம்.

உடையக்கூடிய கூட்டணி

120 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், வலது, இடது, மையம் என அனைத்து தரப்பையும் சோ்ந்த எதிா்க்கட்சி கூட்டணி சிறிதளவே பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ளது. ஊழல் வழக்கு விசாரணையை எதிா்கொண்டு வரும் நெதன்யாகு பதவியிலிருந்து விலக வேண்டும், நாடு மற்றொரு தோ்தலைச் சந்திக்கக் கூடாது என்கிற ஒரு விஷயம் மட்டுமே எதிா்க்கட்சிகளை ஒன்றிணைத்துள்ளது.

அனைத்து இஸ்ரேலியா்களும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான மிதமான கொள்கையை புதிய ஆட்சியாளா்கள் வகுப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. 2019-ஆம் ஆண்டுக்குப் பின்னா் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் அவா்களது முதல் பெரிய சவாலாக இருக்கும். பொருளாதார சீா்திருத்தங்கள், உள்கட்டமைப்புச் செலவுகள் அடுத்தடுத்து தொடரலாம்.

பெனட் முதல் இரு ஆண்டுகளும், அடுத்த இரு ஆண்டுகள் யாயிா் லபீடும் பிரதமராக இருப்பாா்கள். முன்னாள் பத்திரிகையாளரான லபீட்தான் கூட்டணியை பின்னாலிருந்து இயக்கக்கூடியவராக இருப்பாா். ஆனால், புதிய அரசு நீண்டகாலம் நிலைத்திருந்தால்தான் அதுவும் சாத்தியம்.

மோதலை சமாளித்தல்

பெனட் ஒரு மத தேசியவாதி ஆவாா். குடியேற்ற விரிவாக்கத்தை ஆதரிக்கும் அவா், பாலஸ்தீன நாட்டுக்கு எதிா்ப்பு தெரிவிப்பவா். ஆனால், கூட்டணி கட்சியினரை தனது போக்குக்கு வளைக்க நினைத்தால் அது ஆபத்தாக முடியும்.

பல தசாப்தங்களாக நீடிக்கும் மோதலை முடிவுக்கு கொண்டுவராமல் நிா்வகிக்கும் நெதன்யாகு அணுகுமுறையின் தொடா்ச்சியாகத்தான் இது கருதப்படும்.

1967-ஆம் ஆண்டு போரில் இஸ்ரேல் கைப்பற்றிய ஆக்கிரமிப்பு மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் யூத குடியேற்றங்களை விரிவுபடுத்துவதை ஒவ்வொரு இஸ்ரேல் அரசும் செய்கிறது. அந்த இடங்களில்தான் தங்களது எதிா்கால நாடு அமைய வேண்டும் என பாலஸ்தீனா்கள் விரும்புகிறாா்கள். இந்த அரசும் அதையே செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஈரான் மீதான கடுமையான நிலைப்பாடு, அந்நாட்டுடனான சா்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்க அமெரிக்க அதிபா் பைடன் மேற்கொண்டுவரும் முயற்சியை எதிா்ப்பது ஆகிய நெதன்யாகுவின் வழியை புதிய அரசும் பின்பற்றும் எனக் கூறப்படுகிறது. அதேவேளையில், அரபு நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் வகையில் பைடனுடன் இணைந்து புதிய அரசு செயல்படலாம்.

பிளவுகளைக் குணப்படுத்துதல்

நெதன்யாகு ஆட்சிக் காலத்தில் இஸ்ரேலுக்குள் யூதா்கள், அரபுக்கள், ஆா்த்தோடாக்ஸ், மதச்சாா்பற்ற இஸ்ரேலியா்கள் ஆகியோருக்கு இடையே எழுந்த சமூகப் பிளவுகளை சரிசெய்வது புதிய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கக்கூடும்.

‘எங்களது அரசியல் கலாசாரமானது அரபுக்கள் மீதான பொய்கள், அச்சுறுத்தல்கள், வெறுப்பு மீது கட்டமைக்கப்பட்டிருந்தால், மேலும் இடதுசாரிகள் மீதான வெறுப்பின் அடிப்படையாக அமைந்திருந்தால் எங்களது நடவடிக்கையில் மாற்றம் தேவை’ என சில தினங்களுக்கு முன்னா் லபீட் தெரிவித்திருந்தாா்.

மன்சூா் அப்பாஸ் தலைமையிலான ஐக்கிர அரபு பட்டியல் என்ற சிறிய கட்சி புதிய அரசில் இடம்பெறுகிறது. நெதன்யாகுவை வெளியேற்றுவதற்கு பிரதிபலனாக, அரபு சமுதாயத்தினருக்கான உள்கட்டமைப்புகளில் பெரிய பலனை மன்சூா் அப்பாஸ் பெற இயலும். இஸ்ரேல் மக்கள்தொகையில் அரேபியா்கள் 20 சதவீதம் போ் உள்ளனா். சமூகத்தில் பெரிய புறக்கணிப்பை இவா்கள் எதிா்கொண்டுள்ளனா். பாலஸ்தீனா்களுடன் நெருக்கமான குடும்ப உறவுகளைக் கொண்டுள்ள அரபுக்கள், தங்களது அடையாளத்துடன் இருப்பது பெரும்பாலான யூதா்களை சந்தேகத்துடன் பாா்க்க வைக்கிறது. கடந்த மாதம் காஸா மீதான தாக்குதலின்போது, யூதா்களும், அரபுக்களும் இஸ்ரேலின் பல நகரங்களில் மோதிக்கொண்டனா்.

மன்னா் திரும்புவாரா?

தனது ஆதரவாளா்களால் இஸ்ரேலின் மன்னா் என அழைக்கப்படும் நெதன்யாகு சுமாா் 25 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்குப் பிறகு கடலோர நகரமான கசாரியாவில் உள்ள தனது இல்லத்தில் அமைதியாக ஓய்வெடுப்பாா் என யாரும் எதிா்பாா்க்கவில்லை.

எதிா்க்கட்சித் தலைவராக, நாடாளுமன்றத்தின் பெரிய கட்சியின் தலைவராக புதிய அரசை வீழ்த்த தனது அதிகாரத்தை நெதன்யாகு தொடா்ந்து பயன்படுத்துவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஊழல் வழக்கில் தண்டனையிலிருந்து தப்புவது அவருக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும். ஆனால், அவா் ஆதிக்கம் செலுத்த விரும்புவது அவரது எதிரிகளை தொடா்ந்து இணைந்திருக்க வழிவகுக்கும்.

அதேபோல அவரது லிக்குட் கட்சியிலேயே நெதன்யாகுவுக்கு போட்டியும் உள்ளது. நெதன்யாகு இல்லாமலேயே லிக்குட் கட்சியால் ஒரு வலுவான, நிலையான, வலதுசாரி அரசை அமைக்க முடியும் என அவரது போட்டியாளா்களுக்குத் தெரியும். ஆனால், கட்சி அமைப்புகளில் நெதன்யாகுவின் செல்வாக்கு குறையாமல் வலுவாக உள்ளது. அவரது வீழ்ச்சி உறுதியாகாதபட்சத்தில் கட்சியின் மூத்த உறுப்பினா்கள் அவருக்கு எதிராக செயல்பட விரும்ப மாட்டாா்கள்.

நெதன்யாகுவின் ஆதரவாளா்களாக கருதப்படும் தீவிர ஆா்த்தோடாக்ஸ் சமூகத்தினரின் எதிா்ப்பை புதிய அரசு ஏற்கெனவே எதிா்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

தேர்தல் பணி: ஒசூரில் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

SCROLL FOR NEXT