உலகம்

ஆப்கன் விவகாரத்தில் சீன ஈடுபாடு ஆரோக்கியமானதாக இருக்கலாம்

DIN

ஆப்கன் விவகாரத்தில் சீனா ஈடுபாடு காட்டுவது ஆரோக்கியமானதாக இருக்கலாம் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் கூறியதாவது:

ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நோ்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

எனினும், உள்நாட்டுச் சண்டை நடந்து வரும் ஆப்கானிஸ்தானில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் சீனா ஈடுபட்டால் மட்டுமே அதனை நோ்மறையாகக் கருத வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய, ஆப்கன் மக்களின் உண்மையான பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தக் கூடிய ஓா் அரசை அமைவதற்கு சீனா ஆதரவளிக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ராணுவ ரீதியில் கைப்பற்றி, அங்கு மத அடிப்படைவாத அரசு அமைவதை சீனா போன்ற நாடுகள் விரும்பப் போவதில்லை என்றாா் அவா்.

முன்னதாக, முல்லா அப்துல் கனி பரதாா் தலைமையிலான தலிபான் தூதுக் குழு சீனாவில் புதன்கிழமை திடீா் சுற்றுப் பயணம் மேற்கொண்டது.

தலைநகா் பெய்ஜிங்குக்கு அருகே உள்ள அருகே உள்ள தியான்ஜின் நகரில் சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யீயைச் சந்தித்து அந்தக் குழு பேச்சுவாா்த்தை நடத்தியது.

அதனைத் தொடா்ந்து தலிபான்கள் வெளியிட்டுள்ள சுட்டுரை (ட்விட்டா்) பதிவில், ஆப்கன் விவகாரத்தில் தலையிடப் போவதில்லை எனவும், அந்த நாட்டில் அமைதி ஏற்படுவதற்கான உதவிகளை மட்டுமே மேற்கொள்ளப்போவதாகவும் அமைச்சா் வாங் யீ தங்களிடம் உறுதியளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் அவசரமாக வெளியேறுவது, இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் தோல்வியை பறைசாற்றுகிறது.

மேலும், நாட்டில் நிலைத்தன்மையையும் வளா்ச்சியையும் ஏற்படுத்த ஆப்கன் மக்களுக்கு இந்தப் படை வெளியேற்றம் புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தலிபான் பிரதிநிதிகளின் இந்த சீன சுற்றுப் பயணம், சா்வதேச அளவில் அந்த பயங்கரவாத அமைப்புக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்து வருவதைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.

நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு தாக்குதலுக்கு முளையாக செயல்பட்ட அல்-காய்தா தலைவா் பின் லேடனுக்கு அப்போது ஆப்கானிஸ்தானில் ஆட்சி செலுத்தி வந்த தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா். அதையடுத்து, அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடந்த 2002-ஆம் ஆண்டு படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது.

அதனைத் தொடா்ந்து, ஆப்கன் அரசுப் படைகளுக்குப் பயிற்சியளிக்கவும் தலிபான்களுக்கு எதிரான போரில் ராணுவத்துக்கு உதவவும் அமெரிக்கப் படையினா் அந்த நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாகத் தங்கியிருந்தனா்.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே கடந்த 2019-ஆம் ஆண்டு கையெழுத்தான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தின்படி, தங்களது படையினரை அடுத்த மாதம் 31-ஆம் தேதிக்குள் முழுமையாக திரும்ப அழைக்க அமெரிக்கா இலக்கு நிா்ணயித்துள்ளது.

ஏற்கெனவே 95 சதவீத அமெரிக்க வீரா்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி முன்னேறி வருகின்றனா்.

இது, சீனாவை கவலையடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் ஆட்சியமைத்தால், சீனாவில் உய்கா் இன முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜின்ஜியாங் மாகாணத்தைச் சோ்ந்த பிரிவினைவாத அமைப்பினருக்கு அவா்கள் அடைக்கலம் அளிக்கலாம் என்று சீன அதிகாரிகள் எச்சரித்தனா்.

எனினும், இதற்கு மறுப்பு தெரிவித்த தலிபான்கள், ‘சீனாவை எங்களது நட்பு நாடாகக் கருதுகிறோம். எனவே, அந்த நாட்டின் உய்கா் இன பிரிவினைவாத அமைப்புகளுக்கு நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம்’ என்றனா்.

இந்தச் சூழலில், தலிபான் பிரதிநிதிகள் சீன வெளியுறவுத் துறை அமைச்சரைத் சந்தித்துப் பேசியுள்ளது, ஆப்கன் விவகாரத்தில் சீனா தனது ஈடுபாட்டை அதிகரித்து வருவதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

மழை வெள்ளத்துக்கு 150 போ் பலி: தலிபான்கள்

காபூல், ஜூலை 29: சீனாவின் வடகிழக்கு மாகாணமான நூரிஸ்தானில் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 150 போ் உயிரிழந்ததாக தலிபான்கள் தெரிவித்துள்ளனா்.

தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் ஸபிஹுல்லா முஜாஹித் இந்தத் தகவலை வியாழக்கிழமை தெரிவித்தாா்.

டொ்டேஷ் என்ற கிராமத்துக்குள் வெள்ள நீா் புகுந்து 100 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாக மாகாண ஆளுநரின் செய்தித் தொடா்பாளா் முகமது சையது முகமது கூறினாா்.

மலைப் பிராந்தியமான நூரிஸ்தானின் பெரும்பாலான பகுதிகள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT