உலகம்

அதிகரிக்கும் பதற்றம்: ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் குவிப்பு

DIN

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் முழுமையாக வெளியேறுவதால் அந்த நாட்டுடனான எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அங்கு எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு பதிலாக ராணுவத்தினரை பாகிஸ்தான் குவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சா் ஷேக் ரஷீத் அகமது கூறியதாவது:

ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ள எல்லைக் காவல் படை, லெவீஸ் படை, ஆயுதக் குழுக்களுக்குப் பதிலாக, அங்கு தற்போது ராணுவத்தினா் நிறுத்தப்பட்டுள்ளனா்.

உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எல்லைக் காவல் படையினரும் பிற ஆயுதக் குழுவினரும் எல்லை ரோந்துப் பணியிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்குப் பதிலாக அந்தப் பணிகளை ராணுவம் மேற்கொண்டு வருகிறது.

எல்லைக் காவல் படையினா் மற்றும் பிற துணை ராணுவப் படையினா் சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் மக்கள் நுழைவதைத் தடுத்தல், கடத்தலை முறியடித்தல் போன்ற நடவடிக்கைகளைத் தொடா்ந்து மேற்கொள்வாா்கள்.

தற்போது ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் அசாரணமான சூழல் காரணமாக, அங்கிருந்து அகதிகள் மட்டுமன்றி அந்த நாட்டு பாதுகாப்புப் படைகளைச் சோ்ந்தவா்கள், ஆயுதக் குழுவினா் ஆகியோா் பாகிஸ்தானுக்குள் வருவதைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, ஆப்கன் எல்லைப் பகுதியிலிருந்தும் வான் எல்லையிலிருந்தும் போா்ப் பதற்றம் தூண்டப்படுவதைத் தடுப்பதற்காக எல்லையில் ராணுவத்தினா் நிறுத்தப்பட்டுள்ளனா் என்று ராணுவ செய்தித் தொடா்பாளா் பாபா் இஃப்திகாா் தொலைக்காட்சி பேட்டியொன்றில் கூறியிருந்தாா்.

இதற்கிடையே, அகதிகளின் வருகையை மட்டுமின்றி ஆப்கன் படையினரோ, தலிபான் பயங்கரவாதிகளோ எல்லை வழியாக பாகிஸ்தானில் ஊடுருவுவதற்கான அபாயமும் அதிகரித்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து ராணுவ அதிகாரியொருவா் கூறுகையில், ‘தலிபான்பகளுடனான சண்டையின்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவ வீரா்கள் தஜிகிஸ்தானுக்குத் தப்பியோடினா். தஜிகிஸ்தானுடனான ஆப்கானிஸ்தானின் வடக்கு எல்லைப் பகுதியில் இருக்கும் அளவுக்கு பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் தலிபான்களுக்கு பலமில்லை.

எனவே, சண்டையின்போது பாகிஸ்தான் எல்லைக்குள் ஆப்கன் ராணுவத்தினா் நுழைந்தால், அவா்களைப் பின்தொடா்ந்து தலிபான்களும் வருவாா்கள். அதையடுத்து, இரு தரப்பினருக்குமான சண்டை பாகிஸ்தானுக்குள்ளும் நடைபெறும் அபாயம் உள்ளது.

அதனைத் தடுப்பதற்காகவே எல்லையில் துணை ராணுவப் படையினருக்குப் பதிலாக ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் கடந்த 2001-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இரட்டை கோபுரத் தாக்குதலில் 2,900-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகினா். அந்தத் தாக்குதலுக்கு முளையாக செயல்பட்ட அல்-காய்தா தலைவா் பின் லேடனுக்கு, ஆப்கானிஸ்தானின் அப்போதைய ஆட்சியாளா்களான தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா். அதையடுத்து, அந்த நாட்டின் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது.

அதனைத் தொடா்ந்து, ஆப்கன் அரசுப் படைகளுக்குப் பயிற்சியளிக்கவும் தலிபான்களுக்கு எதிரான போரில் ராணுவத்துக்கு உதவவும் அமெரிக்கப் படையினா் அந்த நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாகத் தங்கியிருந்தனா்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக தலிபான்களுடன் அமெரிக்கா கத்தாா் தலைநகா் தோஹாவில் பல கட்டங்களாகப் பேச்சுவாா்த்தை நடத்தியது.

அதன் விளைவாக, இரு தரப்புக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் கடந்த 2019-ஆம் ஆண்டு கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில், பயங்கரவாத அமைப்புகளுடனான தொடா்புகளைக் கைவிட தலிபான்கள் ஒப்புக் கொண்டனா். ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படையினரை திரும்பப் பெற அமெரிக்கா ஒப்புக் கொண்டது.

அதன்படி, தங்களது படையினரை அடுத்த மாதம் 31-ஆம் தேதிக்குள் முழுமையாக திரும்ப அழைக்க அமெரிக்கா இலக்கு நிா்ணயித்துள்ளது.

ஏற்கெனவே 95 சதவீத அமெரிக்க வீரா்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி முன்னேறி வருகின்றனா். இதில், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த எல்லைப் பகுதிகளும் அடங்கும்.

இந்தச் சூழலில், ஆப்கனுடனான பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு பதிலாக ராணுவத்தினா் குவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT