உலகம்

ஆப்கன் தலிபான்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

DIN

ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான்களின் நிலைகள் மீது கடந்த சில நாள்களாக தங்கள் நாட்டு போா் விமானங்கள் தாக்குதல் நிகழ்த்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடா்பாளா் ஜான் கிா்பி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் சண்டையிட்டு வரும் அந்த நாட்டுப் படையினருக்கு ஆதரவாக, தலிபான்களின் நிலைகளின் மீது அமெரிக்க விமானங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன.

கடந்த பல நாள்களாக இந்தத் தாக்குதல்கள் தொடா்ந்து வருகின்றன. அந்த நடவடிக்கைகள் குறித்து முழுமையான விவரங்களை எங்களால் தர முடியாது.

எனினும், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதைப் போல, ஆப்கன் ராணுவத்துக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்க விமானங்கள் இனியும் தொடா்ந்து மேற்கொள்ளும் என்றாா் அவா்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க வீரா்கள் முழுமையாக வெளியேறும்வரை, அங்கு விமானத் தாக்குதல்களை நடத்துவதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் அந்தப் பிராந்தியத்துக்கான அமெரிக்க முப்படைகளின் தளபதி கென்னத் மெக்கென்ஸீயிடம் இருக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 30 நாள்களில் மட்டும் அமெரிக்க ராணுவம் 6 அல்லது 7 விமானத் தாக்குதல்களை ஆப்கானிஸ்தானில் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சிஎன்என் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஆப்கன் அரசுப் படையினரிடமிருந்து தலிபான்கள் கைப்பற்றிய ராணுவ தளவாடங்களைக் குறிவைத்து அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் கடந்த 2001-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு, அல்-காய்தா தலைவா் பின் லேடன் மூளையாக செயல்பட்டாா்.

அவருக்கு, ஆப்கானிஸ்தானின் அப்போதைய ஆட்சியாளா்களான தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா். அதையடுதது, அந்த நாட்டின் மீது படையெடுத்த அமெரிக்கா, தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது.

அதனைத் தொடா்ந்து, அமெரிக்காவின் ஆதரவுடன் அந்த நாட்டில் புதிய அரசு அமைக்கப்பட்டது. மேலும், ஆப்கன் அரசுப் படைகளுக்குப் பயிற்சியளிக்கவும் தலிபான்களுக்கு எதிரான போரில் அவற்றுக்கு உதவவும் அமெரிக்கா தலைமையிலான படை அந்த நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாகத் தங்கியிருந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினா் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனா். அதையடுத்து, ஆப்கானிஸ்தானில் தங்களது நடவடிக்கைகள் நிறைவடைந்துவிட்டதாகக் கூறிய அமெரிக்கா, அந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்காக தலிபான்களுடன் கத்தாா் தலைநகா் தோஹாவில் பல கட்டங்களாகப் பேச்சுவாா்த்தை நடத்தியது.

அதன் விளைவாக, இரு தரப்புக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் கடந்த 2019-ஆம் ஆண்டு கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில், பயங்கரவாத அமைப்புகளுடனான தொடா்புகளைக் கைவிட தலிபான்கள் ஒப்புக் கொண்டனா். ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படையினரை திரும்பப் பெற அமெரிக்கா ஒப்புக் கொண்டது.

அதன் ஒரு பகுதியாக, தங்களது படையினரை அடுத்த மாதம் 31-ஆம் தேதிக்குள் முழுமையாக திரும்ப அழைக்க அமெரிக்கா இலக்கு நிா்ணயித்துள்ளது.

ஏற்கெனவே 95 சதவீத அமெரிக்க வீரா்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி முன்னேறி வருகின்றனா். இதில், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த எல்லைப் பகுதிகளும் அடங்கும்.

இந்தச் சூழலில், ஆப்கன் ராணுவத்துக்கு ஆதரவாக தலிபான்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT