உலகம்

தொடரும் தலிபான்களின் ஆதிக்கம்: காந்தஹாரில் இந்தியத் தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்

11th Jul 2021 11:52 AM

ADVERTISEMENT

காந்தஹாரில் உள்ள இந்தியத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. 

ஆப்கனில் பல ஆண்டுகளாக தலிபான் படையினருக்கும் அமெரிக்க ராணுவத்திற்கும் இடையே போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் தோஹாவில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் தலிபான்களுக்கும், அமெரிக்க ராணுவத்திற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. ஆப்கன் அரசுடன் தலிபான்கள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும், ஆப்கனிலிருந்து வெளியேறும் அமெரிக்கப் படை மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பன உள்ளிட்ட முடிவுகள் அதில் எட்டப்பட்டன.

அதன்படி, நியூயாா்க் இரட்டை கோபுர தாக்குதல் தினமான செப். 11-ஆம் தேதிக்குள் ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக திரும்பப் பெறப்படும் என அதிபா் பைடன் அறிவித்திருந்தாா். அதன்படி, படையினரை திரும்பப் பெறும் நடவடிக்கையும் தொடங்கியது. 

அமெரிக்க படைகள் விலகி வரும் நிலையில், ஆப்கானிஸ்தானின் முக்கிய பிராந்தியங்களை தலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் எடுத்து வருகின்றன. கிட்டத்தட்ட 85 விழுக்காடு நிலப்பரப்பை கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டதாகவும் தலிபான்கள் அறிவித்தனர்.

ADVERTISEMENT

இதனால், முக்கிய நகரங்களில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். காந்தஹாரில் உள்ள இந்தியத் தூயதரகத்தில் பணிபுரிந்துவரும் 50 அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில், தூதரகம் மூடப்படுவதாக வெளியான செய்திக்கு இந்திய வெளியுறவுத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. தூதரகத்தில் இருந்து அதிகாரிகள் வெளியேற்றப்பட்டது உண்மை தான், ஆனால், தூதரகம் மூடப்படவில்லை என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார். மேலும் தலிபான்களின் நடவடிக்கையை தீவிரமாக இந்தியா கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT