உலகம்

கரோனா தடுப்பூசி: இந்தியாவுக்கு இலங்கை நன்றி

27th Jan 2021 03:04 AM

ADVERTISEMENT

நல்லெண்ண அடிப்படையில் இலங்கைக்கு 5 லட்சம் கரோனா தடுப்பூசி வழங்கியதற்காக அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
 நல்லெண்ண அடிப்படையில், பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர், செஷல்ஸ், ஆப்கானிஸ்தான், மோரீஷஸ் ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது.
 இந்த வரிசையில், இலங்கைக்கு 5 லட்சம் கரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்குகிறது இந்தியா. இந்தத் தடுப்பூசிகள் கொழும்புக்கு வியாழக்கிழமை (ஜன. 28) வந்து சேரும் என கொழும்பில் உள்ள இந்தியத் தூதர் தகவல் தெரிவித்ததாக அதிபர் கோத்தபய ராஜபட்ச அமைச்சரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய அரசுக்கு நன்றியும் பாராட்டும் பதிவு செய்யப்பட்டது.
 இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு இலங்கை அரசு கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து தடுப்பூசி பெறுபவர்களின் முன்னுரிமைப் பட்டியலை அரசு இறுதி செய்துள்ளது என இலங்கை ராணுவ தலைமை தளபதி சவேந்திர சில்வா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இதன்படி, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு முதலாவதாக தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
 இலங்கையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தலைமை ஏற்று பணியாற்றி வருபவர் ராணுவ தலைமை தளபதி சவேந்திர சில்வா என்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT