உலகம்

உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை: உத்தரவுகளில் கையெழுத்திடுகிறார் பைடன்

26th Jan 2021 07:38 AM

ADVERTISEMENT

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கவும், விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும் வகை செய்யும் நிர்வாக உத்தரவுகளில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திடவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் புதிய அதிபரான ஜோ பைடன், பதவியேற்ற முதல் நாளிலேயே பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அவற்றில் பல முன்னாள் அதிபர் டிரம்ப்பின் கொள்கை முடிவுகளுக்கு எதிரானவையாகும். 

அதில், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றில் அமெரிக்கா மீண்டும் இணைவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உள்நாட்டு விவகாரத்திலும் அதிபர் பைடன் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தது: உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவதை ஊக்குவிக்கும் முக்கிய உத்தரவுகளில் பைடன் கையெழுத்திடவுள்ளார். அதில், நாட்டில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்கள் தங்களது தேவைகளுக்காக உள்நாட்டு தயாரிப்புகளைக் கொள்முதல் செய்வதை கட்டாயப்படுத்தும் உத்தரவு முக்கியமானதாகும். 

ADVERTISEMENT

இந்தச் செலவினங்களுக்காக மட்டும் மத்திய அரசு ஆண்டுக்கு 600 பில்லியன் டாலர்களை செலவழிக்கிறது. இந்த உத்தரவானது உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த உதவும். மேலும், அமெரிக்க தொழில்துறையில் முதலீடு செய்வதற்கான வழியை ஏற்படுத்துவதுடன் சர்வதேச சந்தையில் அமெரிக்கா முன்னிலை வகிக்கவும் முடியும்.

கரோனா நோய்த்தொற்றுப் பரவலின்போது அமெரிக்காவில் முக்கியமான விநியோகச் சங்கிலி பலவீனமாக இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

 அதை சரிசெய்யும் வகையில் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை புதிய உத்தரவுகள் உறுதிப்படுத்தும் என அவர்கள் தெரிவித்தனர்.

முன்னாள் அதிபர் டிரம்ப் 2017-இல் பதவியேற்றவுடன் இதேபோல் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் உத்தரவுகளில் கையெழுத்திட்டார். சில மாறுதல்களுடன் அதேபோன்ற நடவடிக்கையை அதிபர் பைடனும் மேற்கொள்ளவுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT