உலகம்

சவால்களை எதிர்கொள்ளும் அதிபர் ஜோ பைடன்

25th Jan 2021 08:42 AM | சத்தீஷ் வைத்யா

ADVERTISEMENT

அமெரிக்கக் குடியரசின் 46-ஆவது அதிபராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து ஜோ பைடன் முழு மூச்சாக பணியில் இறங்கிவிட்டார். ஏற்கெனவே இரண்டு முறை துணை அதிபராகப் பணியாற்றிய அனுபவமும் 1973 முதல் 2009 வரை அமெரிக்காவின் பிலாவர் மாநிலத்தின் பிரதிநிதியாக மேலவையில் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு இருப்பதால் நிர்வாகம் அவருக்குப் புதிதொன்றும் அல்ல.
 உள்நாட்டுச் சவால் மட்டுமல்ல...
 முந்தைய டிரம்ப் நிர்வாகம் விட்டுச் சென்றிருக்கும் பல குளறுபடிகளைச் சரி செய்வதும், கொள்கை முடிவுகளை மாற்றி அமைப்பதும், உடனடியாகத் தேவைப்படும் நிர்வாக முடிவுகளை எடுப்பதும் ஜோ பைடனின் உடனடி கவனத்தை ஈர்த்திருக்கின்றன. கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலைத் தடுத்து நிறுத்துவதற்கான அதிரடித் திட்டங்களை உடனடியாக அறிவித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய உள்நாட்டு சவால் மட்டுமல்லாமல், அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கைகளிலும் பல மாற்றங்களைச் செய்தாக வேண்டிய கட்டாயம் ஜோ பைடனுக்கு ஏற்பட்டிருக்கிறது.
 உள்நாட்டு பிரச்னை என்று எடுத்துக்கொண்டால் கொள்ளை நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதையும், கொள்ளை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத்தைச் சீர்படுத்துவதையும் மிக முக்கியமான பணிகளாக பைடன் நிர்வாகம் எதிர்கொள்கிறது. அரசியல் ரீதியாக அல்லாமல் அறிவியல் ரீதியாக, கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கான எல்லா நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது பைடன் நிர்வாகம்.
 கரோனாவை கட்டுப்படுத்த...
 தடுப்பூசித் திட்டத்தைத் தீவிரப்படுத்துதல், நோய்த்தொற்றுப் பரிசோதனைகளை அதிகரித்தல், முகக் கவசம் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் தயாரிப்பை அதிகரித்தல் என்று 10 அம்சங்கள் அடங்கிய திட்டத்தை அறிவித்து அதை நிறைவேற்றுவதற்கான உத்தரவுகளையும் அதிபர் பைடன் பிறப்பித்திருக்கிறார். அடுத்த 100 நாள்களுக்கு அமெரிக்காவில் அனைவரும் பொது இடங்களில் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பதுடன், வெளிநாடுகளுக்குச் செல்வோர் விமானம் ஏறுவதற்கு முன்னர் கொவைட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதையும் வெளிநாடுகளிலிருந்து திரும்பி வருபவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் கட்டாயமாக்கி இருக்கிறார் அதிபர் பைடன்.
 10 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி
 இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் அமெரிக்காவில் கொவைட் 19 தீநுண்மிக்கு பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை இரண்டாம் உலகப் போரில் பலியான அமெரிக்கர்களின் எண்ணிக்கையைவிட அதிகம். அடுத்த மாதத்துக்குள் அமெரிக்காவில் கொவைட் 19 காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அமெரிக்கர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார் அதிபர் பைடன். அவரின் பதவிக் காலத்தின் முதல் 100 நாள்களுக்குள், 10 கோடி பேருக்கு கொவைட் 19 தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டம் நிறைவேற்றப்படும் என்று அவர் உறுதியளித்திருக்கிறார்.
 பொருளாதாரத்தைச் சீர்படுத்தவும்...
 கொவைட் 19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியம், நோய்த்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து அமெரிக்காவை மீட்டெடுப்பது என்று பைடன் நிர்வாகம் முனைப்புக் காட்டுவது பாராட்டுக்குரியது.
 இதற்காக 1.9 பில்லியன் டாலர் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்திருக்கிறார் அதிபர் பைடன். கொவைட் 19 காரணமாக அமெரிக்காவில் டிசம்பர் மாதம் மட்டும் ஏறத்தாழ 1,40,000 பேர் வேலையிழந்திருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள் முழு மூச்சில் உற்பத்தியைத் தொடங்கவில்லை. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. ஏற்றுமதிகள் கடுமையாகக் குறைந்துவிட்டன. இந்த நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய மிக முக்கியமான சவாலை பைடன் நிர்வாகம் எதிர்கொள்கிறது.
 புதிய அத்தியாயம்
 ஒருபுறம் உள்நாட்டு பிரச்னைகளை எதிர்கொள்ள புறப்பட்டிருக்கும் அதிபர் பைடன், சர்வதேச பிரச்னைகளிலும் வெளிவிவகார கொள்கைகளிலும்கூட தனது கவனத்தைத் திருப்பியிருக்கிறார் என்பது அவரின் அனுபவத்தின் வெளிப்பாடு.
 பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து முந்தைய டிரம்ப் நிர்வாகம் பின்வாங்கியது. அதேபோல, உலக சுகாதார நிறுவனத்திலிருந்தும் அமெரிக்கா விலகுவதாக அறிவித்தது.
 மீண்டும் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா பங்கேற்கும் என்றும், உலக சுகாதார நிறுவனத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்றும் அறிவித்து உலகிலுள்ள வளர்ச்சி அடையும் நாடுகளில் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார் பைடன். அமெரிக்காவின் பங்களிப்பில்லாமல் உலக சுகாதார நிறுவனம் செயல்பட முடியாது. அந்த நிறுவனம் செயல்பட முடியாமல் போனால், பின்தங்கிய ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் சுகாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்படும்.
 நுழைவு அனுமதியிலும் (விசா) மாற்றம்
 அமெரிக்காவின் நுழைவு அனுமதி (விசா) பிரச்னையில் டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான நிலைப்பாட்டை புறந்தள்ளி புதிய அறிவிப்புகளைச் செய்திருக்கிறது அதிபர் பைடனின் அரசு. குடியுரிமை பெறுவது குறித்தும்கூட சில மாற்றங்களை அறிவித்திருக்கிறது.
 இதற்கு முன்னால்வரை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடுகளுக்கும் சில குறிப்பிட்ட அளவு குடியுரிமை ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த முறையை ரத்து செய்திருக்கிறது. இதன்மூலம் அமெரிக்காவில் பணிபுரியச் செல்லும் இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களின் நுழைவு அனுமதியும் அங்கே பணியாற்றும் பலருடைய குடியுரிமைக்கான விண்ணப்பமும் ஆக்கபூர்வமான பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்கிற அளவில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை மகிழ்ச்சியடையும்.
 இந்தியாவுடன் நேசக் கரம்
 ஜனநாயகக் கட்சி தேர்தலில் வெற்றிபெற்றபோது இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு என்னவாகுமோ என்ற கவலை பலருக்கும் ஏற்பட்டதில் நியாயம் இருக்கிறது. முந்தைய அதிபர் டிரம்ப்பின் தேர்தல் பிரசாரத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகத் தலையிட்டு ஆதரவு தெரிவித்தபோதே, அடுத்தாற்போல ஜனநாயகக் கட்சி வெற்றிபெறுமானால் இந்திய - அமெரிக்க உறவு என்னவாகுமோ என்கிற கேள்வி எழுப்பப்பட்டது.
 நல்லவேளையாக, புதிய அதிபர் ஜோ பைடனும், துணை அதிபராகப் பதவியேற்றிருக்கும் கமலா ஹாரிஸும் தேர்தலுக்கு முன்னால் நடந்த சம்பவங்களைப் புறந்தள்ளி, தங்களது நீண்டநாள் இந்தியத் தொடர்பை கருத்தில்கொண்டு நேசக்கரம் நீட்டியிருப்பதற்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.
 நட்புறவுக்கு முன்னுரிமை
 பைடன் நிர்வாகத்தில் உள்துறை-வெளியுறவுத் துறை அமைச்சராக பதவியேற்றிருக்கும் அந்தோணி பிளிங்கன் 20 ஆண்டு கால இந்திய - அமெரிக்க நட்புறவுக்கு முன்னுரிமை அளித்து அதனைப் பலப்படுத்துவோம் என்று அறிவித்திருக்கிறார். அதேபோல, பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் லாயிட் ஹாஸ்டன் இந்தியாவுக்கு முக்கியமான பாதுகாப்புக் கூட்டாளி அந்தஸ்தைச் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டப் போவதாக அறிவித்திருக்கிறார். அதன்மூலம் அமெரிக்காவிலிருந்து இந்தியா ஆயுதங்களைப் பெறுவதிலும், ஆயுதத் தயாரிப்பில் தகவல் தொழில்நுட்பம் பெறுவதிலும் இனிமேல் எந்தவிதத் தடையும் இருக்காது.
 சீனாவுக்கு எதிரான நிலை தொடரும்
 ஆசிய விவகாரங்கள் குறித்த அதிபர் பைடனின் ஆலோசகரான குத் கேம்ப்பல், இந்தியா - அமெரிக்கா - ஆஸ்திரேலியா - ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளும் இணைந்த "க்வாட்' என்கிற கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருப்பது டிரம்ப் நிர்வாகத்தின் முடிவின் நீட்சி. முன்புபோலவே, சீனாவை எதிர்கொள்வதில் அமெரிக்கா கடுமை காட்டும் என்பதை இந்த முடிவு உறுதிப்படுத்துகிறது.
 ஈரானுடன் மீண்டும் உறவு?
 ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை பைடன் நிர்வாகம் மீண்டும் முன்னெடுக்கும் என்று தோன்றுகிறது. முந்தைய டிரம்ப் நிர்வாகம் அந்த ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கியது முதல் அமெரிக்க - ஈரான் உறவு பழையபடி மோசமானது.
 அதைத் தொடர்ந்து அமெரிக்காவைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக சாபஹார் துறைமுகம் உள்ளிட்ட பல வளர்ச்சிப் பணிகளில் இந்தியாவும் மெத்தனம் காட்டியது; இதனால், ஈரானிய அரசின் அதிருப்தியை சம்பாதிக்க நேர்ந்தது. இப்போது அமெரிக்கா மீண்டும் ஈரானுடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்க முற்பட்டால் அதனால் இந்திய - ஈரானிய உறவும் பழையதுபோலவே நெருக்கமும் நட்புறவும் உடையதாக மாறக்கூடும்.
 பாகிஸ்தான் பிரச்னை தொடரும்
 இதெல்லாம் சொன்னாலும்கூட இந்திய - அமெரிக்க உறவில் பாகிஸ்தான் ஒரு பிரச்னையாகத் தொடரத்தான் செய்யும்.
 ஆப்கானிஸ்தானத்தில் சமாதான முயற்சியை அமெரிக்கா முன்னெடுக்குமானால் அதற்கு பாகிஸ்தானின் உதவி தேவைப்படும். பாகிஸ்தானிய ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை அமெரிக்கா மீண்டும் தொடங்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
 ரஷியாவிடமிருந்து ராணுவத் தளவாடங்களை இந்தியா வாங்குகிறது. அமெரிக்காவின் எதிர்ப்பு நாடுகளிலிருந்து ஆயுதங்கள் வாங்கும்போது அந்த நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா தடைகளைப் பிறப்பிப்பது வழக்கம். அதனால், இந்தப் பிரச்னை இந்தியாவுக்கும் ஜோ பைடன் அரசுக்கும் இடையே கருத்துவேறுபாடை ஏற்படுத்தக்கூடும்.
 காஷ்மீர் குறித்த நிலைப்பாடு என்ன?
 குடியரசுக் கட்சியைப் போலல்லாமல், ஜனநாயகக் கட்சியினர், அதிலும் குறிப்பாக, துணை அதிபராக பதவியேற்றிருக்கும் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் காஷ்மீர் பிரச்னை குறித்தும், காஷ்மீரிகளின் உரிமைகள் குறித்தும் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவர்கள். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, காஷ்மீரில் 370-ஆவது பிரிவை ரத்து செய்தது உள்ளிட்ட பிரச்னைகளை ஜோ பைடன் நிர்வாகம் எப்படி அணுகப்போகிறது என்பது குறித்து பல்வேறு ஐயப்பாடுகள் எழுப்பப்படுகின்றன. அதுகுறித்த தெளிவான நிலைப்பாடும் புரிதலும் அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் வெளிப்படும்.
 சீன எதிர்ப்பு - இந்தியாவுக்கு சாதகம்
 இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சீனா என்கிற பொது எதிரி இருப்பது இந்தியாவுக்கு சாதகமான அம்சம். ஏனைய பிரச்னைகளையெல்லாம்விட சீனாவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்கிற அமெரிக்காவின் முனைப்பு, இந்தியாவுடனான உறவைச் சீராக வைத்திருக்க உதவும்.
 அடுத்த நான்கு ஆண்டுகள் ஜோ பைடன் ஆட்சியில் இந்தியாவும் அமெரிக்காவும் முன்னெப்போதும் இல்லாத அளவு நெருக்கமாக இருப்பதற்கு சீனஎதிர்ப்பு உதவும் என்று நிச்சயமாக நம்பலாம்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT