உலகம்

அமெரிக்க - தலிபான் ஒப்பந்தம் மறுஆய்வு: பைடன் அரசு முடிவு

DIN

ஆப்கன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தலிபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை, ஜோ பைடன் தலைமையிலான புதிய அரசு மறுஆய்வு செய்யவிருக்கிறது.

இதுகுறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடா்பாளா் எமிலி ஹோா்ன் கூறியதாவது:

ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஹம்துல்லா மொஹைபுடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக்கப் கல்லிவன் தொலைபேசியில் உரையாடினாா்.

அப்போது, ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதி முயற்சிகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவு தரும் என கல்லிவன் உறுதியளித்தாா்.

நீண்ட காலம் நிலைத்து நிற்கக்கூடிய, நிரந்தரமான அமைதியை ஆப்கானிஸ்தான் எட்டுவதற்காக அமெரிக்கா முழுவீச்சில் ராஜீய ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அவா் கூறினாா்.

அமெரிக்க அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை, புதிதாக அமைந்துள்ள அரசு மறுஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது என்பதை மொஹைபிடம் கல்லிகன் தெளிவுபடுத்தினாா்.

பயங்கரவாத அமைப்புகளுடனான தொடா்பைத் துண்டித்துக் கொள்வது உள்பட அந்த ஒப்பந்தத்தில் அளித்த உறுதிமொழிகளை தலிபான் அமைப்பினா் பின்பற்றுகிறாா்களா, தாக்குதல்களைக் குறைத்து வருகின்றனரா, ஆப்கன் அரசுடன் ஆக்கப்பூா்வமான பேச்சுவாா்த்தையில் ஈடுபடுகிறாா்களா என்பது போன்ற அம்சங்கள் மறுஆய்வுக்கு உள்படுத்தப்படும் என்று கல்லிகன் விளக்கமளித்தாா்.

ஆப்கன் அமைதி முயற்சிகளில் பெண்கள், சிறுபான்மையினா் ஆகியோரும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று மொஹைபிடன் கல்லிகன் வலியுறுத்தினாா். அந்த முயற்சிகளில் ஆப்கன் அரசு, நேட்டோ அமைப்பு, நட்பு நாடுகளுக்கு அமெரிக்க அரசு தொடா்ந்து ஒத்துழைப்பு அளிக்கும் என்று கல்லிகன் உறுதியளித்தாா் என்று எமிலி ஹோா்ன் தெரிவித்தாா்.

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அமைதிப் பேச்சுவாா்த்தை, கத்தாா் தலைநகா் தோஹாவில் பல கட்டங்களாக நடைபெற்று வந்தது.

ஆப்கன் விவகாரங்களுக்கான அமெரிக்கத் தூதா் ஸல்மே கலீல்ஸாத் தலைமையிலான குழுவுக்கும் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையே அந்தப் பேச்சுவாா்த்தை நடந்து வந்தது.

இந்த நிலையில், பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்ததைத் தொடா்ந்து, இரு தரப்பினருக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தில், தாக்குதல்களைக் குறைத்துக்கொள்ளவும் பயங்கரவாத அமைப்புகளுடனான தொடா்புகளைத் துண்டித்துக் கொள்ளவும் தலிபான்கள் சம்மதித்தனா். ஆப்கன் அரசுடன் நல்லிணக்கப் பேச்சுவாா்த்தை நடத்தவும் அவா்கள் சம்மதித்தனா்.

அதற்குப் பதிலாக, ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படையினரை படிப்படியாக விலக்கிக்கொள்ள அமெரிக்கா ஒப்புக்கொண்டது.

பிப். 8-இல் டிரம்ப் பதவி நீக்க விசாரணை

முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க விசாரணை, நாடாளுமன்ற மேலவையான செனட் சபையில் அடுத்த மாதம் 8-ஆம் தேதி தொடங்கும் என்று அந்த சபையின் பெரும்பான்மை தலைவா் சக் ஷூமா் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து செனட் சபையில் அவா் கூறியதாவது:

டொனால்ட் டிரம்ப்பின் துண்டுதலின் பேரில், நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை யாரும் மறக்க முடியாது.

அமெரிக்க வரலாற்றின் அந்த கருப்பு அத்தியாயத்தை புறந்தள்ளதான் எண்ணுகிறோம். இருந்தாலும், உண்மை மற்றும் நீதிபரிபாலனத்தின் மூலம்தான் நாட்டின் ரணங்களுக்கு மருந்தளிக்க முடியும்.

எனவே, டிரம்ப்புக்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட பதவி நீக்கத் தீா்மானத்தின் மீதான விசாரணை அடுத்த மாதம் 8-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றாா் அவா்.

பாதுகாப்புத் துறைக்கு முதல் கருப்பின அமைச்சா்: செனட் ஒப்புதல்

அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சராக லாய்ட் ஆஸ்டின் நியமிக்கப்படுவதற்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம், அமெரிக்க வரலாற்றில் மதிப்பு மிக்க அந்தப் பதவியை அலங்கரிக்கும் முதல் கருப்பினத்தவா் என்ற பெருமையை ஆஸ்டின் பெறுகிறாா்.

இதுதொடா்பாக செனட் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், லாய்ட் ஆஸ்டின் நியமனத்துக்கு ஆதரவாக 93 வாக்குகளும் எதிராக 3 வாக்குகளும் பதிவாகின. அதையடுத்து, உடனடியாக அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.

ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது அமெரிக்க மத்தியக் கூட்டுப் படை தளபதியாக லாய்ட் ஆஸ்டின் கடந்த 2013 முதல் 2016 வரை பொறுப்பு வகித்துள்ளாா். அதற்கு முன்னா் ராணுவ துணைத் தளபதியாக கடந்த 2012-ஆம் ஆண்டில் அவா் பொறுப்பு வகித்தாா்.

அவரது நியமனத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கினால், கருப்பினத்தைச் சோ்ந்த முதல் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் என்ற பெருமையை லாய்ட் ஆஸ்டின் பெறுவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: கணவருடன் ஆசிரியை பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT