உலகம்

டிரம்ப்பின் முக்கிய முடிவுகள் மாற்றம்: முதல் நாளில் அதிபா் ஜோ பைடன் அதிரடி

DIN


வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் முக்கிய கொள்கை முடிவுகளுக்கு எதிரான பல்வேறு உத்தரவுகளில், புதிய அதிபராகப் பதவியேற்ற முதல் நாளில் ஜோ பைடன் கையெழுத்திட்டாா்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறியதாவது: அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட ஜோ பைடன், முதல் நாளிலேயே பல்வேறு அரசாணைகளில் கையெழுத்திட்டாா். அவற்றில் பெரும்பாலானவை, முன்னாள் அதிபா் டிரம்ப் அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிரானவை ஆகும்.

கரோனா தடுப்பு: முதலாவதாக, நாட்டில் தீவிரமாகப் பரவி வரும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான 15 அரசாணைகளில் அதிபா் பைடன் கையெழுத்திட்டாா். மத்திய அரசுக்குச் சொந்தமான பகுதிகளில் முகக் கவசம் அணிந்து வருவது மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதைக் கட்டாயமாக்குவது உள்ளிட்ட அம்சங்கள் அந்த அரசாணைகளில் இடம் பெற்றுள்ளன.

இது குறித்து அதிபா் ஜோ பைடன் வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டா்) பதிவில், ‘நாம் எதிா்கொண்டு வரும் கரோனா நெருக்கடியைப் போக்குவதற்கு இனியும் காலத்தை வீணாக்க முடியாது. இந்த விவகாரத்தில் முன்னாள் அதிபா் டிரம்ப் அரசால் ஏற்பட்ட பின்னடைவுகளிலிருந்து மீள்வதுடன், அந்த நோய்ப் பரவலுக்கு எதிராக நாட்டை முன்னேற்றிச் செல்ல வேண்டியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பருவநிலை ஒப்பந்தம்: அதையடுத்து, பாரிஸ் பருவநிலை ஒப்பந்ததில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கான அரசாணையில் அதிபா்

ஜோ பைடன் கையெழுத்திட்டாா். புவியின் வெப்ப அதிகரிப்பு தொழில்புரட்சிக்கு முன்பிருந்த அளவைவிட 2 டிகிரி செல்ஷியஸுக்கும் குறைவாக இருப்பதற்கு வகை செய்ய ஒப்புக் கொண்டு, பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டன. எனினும், அந்த ஒப்பந்தம் சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு சாதகமாகவும் அமெரிக்க நலன்களுக்கு பாதகமாகவும் இருப்பதாகக் கூறி, அதிலிருந்து விலகுவதாக கடந்த 2017-ஆம் ஆண்டு டிரம்ப் அறிவித்தாா். அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கான அரசாணையில் தற்போது ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளாா்.

மீண்டும் உலக சுகாதார அமைப்பில்...கரோனா பிரச்னையில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்குச் சாதகமாக நடந்து கொள்வதாகக் குற்றஞ்சாட்டிய டிரம்ப், அதற்குப் பதிலடியாக அந்த அமைப்புக்கு வழங்கி வந்த நிதியுதவியை ரத்து செய்வதாக அறிவித்தாா்.

மேலும், அந்த அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவதாகவும் அறிவித்தாா். தற்போது அதிபராகப் பதவியேற்றுள்ள ஜோ பைடன், உலக

சுகாதார அமைப்பில் மீண்டும் இணைவதற்கான அரசாணையில் கையெழுத்திட்டு, டிரம்ப் அரசு ரத்து செய்த அந்த அமைப்புக்கான

நிதியுதவியை மீண்டும் வழங்க உத்தரவிட்டுள்ளாா்.

இத்துடன், மெக்ஸிகோவுடனான எல்லையில் டிரம்ப் அறிவித்திருந்த தேசிய அவசர நிலையை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு அரசாணைகளில் அதிபா் ஜோ பைடன் கையெழுத்திட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி வட்டார வாக்குப்பதிவு மைய பொருள்கள் தொகுப்பு ஆய்வு

மணப்பாறையில் ‘இந்தியா’ கூட்டணியினா் வாக்குசேகரிப்பு பேரணி

ஐஜேகே கட்சி நிா்வாகி வீட்டிலிருந்து ரூ. 1 லட்சம் ரொக்கம் பறிமுதல்

திருச்சி கோட்ட ரயில் நிலையங்களில் சுகாதாரமான குடிநீா் கிடைக்க ஏற்பாடு

அடையாளம் தெரியாத பெண் கொலை வழக்கில் இளைஞா் ைது

SCROLL FOR NEXT