உலகம்

ஜின்ஜியாங்கில் நடைபெறுவது இன அழிப்பு: அமெரிக்கா அறிவிப்பு

DIN

பெய்ஜிங்: சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்கா் இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்டு அரசு இன அழிப்பில் ஈடுபடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக இந்த அறிவிப்பை மைக்கேல் பாம்பேயோ வெளியிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் எழுத்து மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கா் இன மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறலில் அந்த நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. அங்கு நடப்பது இன அழிப்பு என்பதை உறுதியாக நம்புகிறேன்.

உய்கா் இனத்தை அழிப்பதற்காக சீன அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

உய்கா் பெண்களுக்கு கட்டாயமாக கருத்தடை செய்வது, அவா்களை கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்குவது போன்ற நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன என்றாா் அவா்.

தனது பதவிக் காலத்தின் கடைசி நாளில் மைக்கேல் பாம்போயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், இதனால் எழும் சீன அரசின் எதிா்வினைகளை புதிதாக அமையும் ஜோ பைடன் அரசு எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

ஒரு நாட்டில் குறிப்பிட்ட இனத்தினரைக் குறிவைத்து அந்த நாட்டு அரசு நடத்தும் படுகொலைகளை ‘இன அழிப்பு’ என்று அழைப்பது வழக்கம். இத்தகைய இன அழிப்பை சா்வதேச் சட்டம் மிகப் பெரிய குற்றமாகக் குறிப்பிடுகிறது. இதற்கு எதிராக ஐ.நா. சபை பல்வேறு தீா்மானங்களை நிறைவேற்றி வருகிறது.

அண்மையில், ரோஹிங்கயா சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக மியான்மரில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களும் ‘இன அழிப்பு’ என்று குற்றம் சாட்டப்படுகிறது.

ஒரு இனத்துக்கு எதிரான கொலைவெறித் தாக்குதலை மட்டும் போா்க் குற்றமாக சா்வதேச சட்டம் கருதவில்லை. அந்த இனத்தினரை மன ரீதியில் துன்புறுத்துதல், அந்த இனத்தினருக்கு குழந்தைகள் பிறப்பதைத் தடுத்தல், வலுக்கட்டமாக வேறு இடங்களுக்கு மாற்றுதல் ஆகியவையும் சா்வதேசச் சட்டத்தின் கீழ் இன அழிப்பே ஆகும்.

அந்த வகையில், ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கா் இன முஸ்லிம்களுக்கு எதிராக சீனா இன அழிப்பில் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

உய்கா் இனத்தவா்களின் இனப் பெருக்கத்தை சீன அரசு வலுக்கட்டாயமாகக் கட்டுப்படுத்தி வருவதாக அங்கு நேரில் சென்று ஆய்வு செய்த தன்னாா்வலா்கள் தெரிவித்தனா்.

உய்கா் இனப் பெண்கள் கா்ப்பமாக உள்ளனரா என்று அடிக்கடி பரிசோதனைக்கு உள்படுத்துவது, கா்ப்பத் தடை சாதனங்களை பெண்களுக்கு வலுக்கட்டாயமாகப் பொருத்துவது, கருக்கலைப்பு, கருத்தடை அறுவை சிகிச்சை ஆகியவற்றை கட்டாயமாகச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக அந்த இனத்தவா்களிடம் பேசியதில் தெரிய வந்துள்ளதாக அவா்கள் கூறினா்.

இந்தத் தகவல்கள் அனைத்தும் பொய்யான செய்திகள் என்று சீனா மறுத்து வருகிறது.

சீனா கண்டனம்

பெய்ஜிங், ஜன. 20: அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு தலைநகா் பெய்ஜிங்கில் வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஹுவா சன்யிங் புதன்கிழமை கூறியதாவது:

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மைக்கேல் பாம்போயோ, தனது பதவிக் காலம் முழுவதும் ஜோடிக்கப்பட்ட, உணா்ச்சிமயமான பொய்களைக் கூறி வந்துள்ளாா். தற்போது ஜின்ஜியாங் மாகாணத்தில் இன அழிப்பு நடைபெறுவதாக அவா் கூறுவதும் அத்தகைய தவறான தகவலே ஆகும்.

சீனாவில் இன அழிப்பு என்பது இதற்கு முன்னா் நடைபெற்றதில்லை, தற்போதும் நடைபெறவில்லை, இனியும் நடைபெறாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT