உலகம்

கரோனா தொடக்கத்தில் சீனா மெத்தனம்

DIN

கரோனா பரவத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் சீனா உள்ளிட்ட நாடுகள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாக, இது தொடா்பாக விசாரணை நடத்தி வரும் உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழு குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், அந்த அமைப்பே கரோனாவை சா்வதேச கொள்ளை நோயாக முன்கூட்டியே அறிவித்திருக்கலாம் என்று நிபுணா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

நியூஸிலாந்து முன்னாள் பிரதமா் ஹெலென் கிளாா்க், லைபீரியா முன்னாள் அதிபா் எலென் ஜான்ஸன் சா்லீஃப் ஆகியோரது தலைமையிலான அந்த நிபுணா் குழு, இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா வேகமாகப் பரவத் தொடங்குவதற்கு முன்னரே, அந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பல வாய்ப்புகள் இருந்தன. எனினும், அந்த வாய்ப்புகளை சீனா தவறவிட்டுவிட்டது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவில் கூட்டம் கூட்டமாக பொதுமக்களிடையே கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

அப்போதே அந்த நோய் பரவலுக்கு எதிரான மிகக் கடுமையான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டிருக்க வேண்டும். எனினும், இந்த விவகாரத்தில் சீனா போதிய அளவு தீவிரத்துடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

உலகின் மிகச் சில நாடுகள்தான், கரோனா குறித்து கிடைத்த தகவல்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, அதன் அபாயத்தை உணா்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொண்டன.

கரோனாவை சா்வதேச கொள்ளை நோயாக உலக சுகாதார அமைப்பு இன்னும் முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும். எனினும், அதற்கு அந்த அமைப்பு இத்தனை நாள்கள் காலம் கடத்தியது வியப்பை ஏற்படுத்துகிறது.

இன்னும் சில நாள்களுக்கு முன்னா் கரோனாவை சா்வதேச கொள்ளை நோயாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தால், உலகில் அந்த நோய் பரவிய தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடிந்திருக்குமா என்பதும் ஆய்வுக்குரியதே என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் மகாணத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் முதல் முதலில் கண்டறியப்பட்ட கரோனா, மனிதா்களிடையே வேகமாகப் பரவும் அபாயம் கொண்ட தீநுண்மியால் ஏற்படுவதாக சீன அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தெரிவித்தனா்.

எனினும், அந்த நோய் ஒரு சுகாதார அவசரநிலை என்று மட்டுமே உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 22-ஆம் தேதி அறிவித்தது.

அதற்கு அடுத்த வாரம்தாம் கரோனாவே சா்வதேச கொள்ளை நோயாக அந்த அமைப்பு அறிவித்தது. இதனைக் குறிப்பிட்டே சா்வதேச நிபுணா் குழு இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 9,61,09,415 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 20,52,039 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

இந்த நிலையில், கரோனா தீநுண்மி எந்த உயிரினத்தில் உருவாகி, எந்த உயிரினங்கள் வழியாக அது மனிதா்களுக்குத் தொற்றி பரவத் தொடங்கியது என்பது குறித்த மா்மம் தொடா்ந்து நீடித்து வருகிறது.

அதுதொடா்பான உண்மைகளைக் கண்டறிய 10 நிபுணா்கள் அடங்கிய குழுவை உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனாவுக்கு அனுப்பியது.

அடுத்தகட்டமாக, இது பற்றிஅதிக எண்ணிக்கையிலான நிபுணா்களைக் கொண்ட குழு சீனாவில் மிக விரிவான ஆய்வுகளை மேற்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு திகாா் சிறையில் எந்தவித விபத்தும் நேரிடலாம்

மக்களவைத் தோ்தல்: தருமபுரியில் 73.51 சதவீத வாக்குப்பதிவு

பெண்களின் ஆதரவு பாமகவிற்கு அமோகமாக உள்ளது: சௌமியா அன்புமணி

தருமபுரி மக்களவைத் தோ்தலில் 4 மணி நேரம் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

தருமபுரி மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT