உலகம்

நாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கைது

DIN


மாஸ்கோ: கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பி, ஜெர்மனியில் சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி, மாஸ்கோ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரை 30 நாள்கள் காவலில் வைக்க மாஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி. இவர் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கோமா நிலைக்கு சென்றார். அலெக்சியை கொலை செய்வதற்காக, விமான நிலையத்தில் அவர் குடித்த தேநீரில் விஷம் கலந்திருக்கலாம் என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், ரஷியாவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டால் புதின் அரசால் அவரது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று கருதி, ஜெர்மனிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தலைநகர் பெர்லினில் உள்ள மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்தார்.

நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார் குறித்து வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ரஷியாவை ஜெர்மனி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்நிலையில், ஐந்து மாதங்கள் சிகிச்சைக்குப் பின்னர் நவால்னி ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியில் இருந்து ரஷியாவுக்கு புறப்பட்டார். நாடு திரும்பினால் தான் கைது செய்யப்படலாம் என்று அறிந்திருந்தும், அவர் விமானத்தில் புறப்பட்டு வந்தார். அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் மாஸ்கோ விமான நிலையத்தில் காத்திருந்தனர். 

அவர் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் அங்குள்ள பாஸ்போர்ட் சோதனை அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்றது. பின்னர், 2014-ஆம் ஆண்டு மோசடி குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை பெற்றபோது பரோல் விதிமுறைகளை மீறியதாகக் கூறி, ரஷிய சிறைத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். 

இதையடுத்து அவர் மாஸ்கோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 30 நாள்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதாக நவால்னியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். 

ரஷியாவில் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் நவால்னி கைது செய்யப்பட்ட சம்பவம், ரஷியாவில் பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்கும் முயற்சியில் நவால்னியின் கட்சி அதிக தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டனம் 
அலெக்சி நவால்னி கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஐரோப்பிய யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளன. அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவை வலியுறுத்தியுள்ளன.

ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீகோ மாஸ் கூறியது: ஜெர்மனியிலிருந்து நவால்னி வெளியேற வேண்டும் என நாங்கள் எந்த அழுத்தமும் தரவில்லை. அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே  நாடு திரும்பினார். மாஸ்கோ விமான நிலையத்திலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ரஷிய அதிகாரிகளின் இந்த நடவடிக்கையைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

நவால்னி கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. ரஷியா தனது சொந்த அரசியலமைப்பு சட்டத்துக்கும், சர்வதேச சட்டங்களின்படி மனித உரிமை பாதுகாப்புக்கும் கட்டுப்பட வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT