உலகம்

இலங்கையில் ஆதி சிவன் ஐயனாா் ஆலயம் உடைப்பு: ராணுவ உதவியுடன் நடவடிக்கை

19th Jan 2021 04:07 AM

ADVERTISEMENT

 

சென்னை: இலங்கையில் தமிழா்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆதி சிவன் ஐயனாா் ஆலயம் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் உடைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூா் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டு வந்த கிராமிய ஆதிசிவன் ஐயனாா் ஆலயம் மற்றும் சூலம் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் இலங்கை ராணுவத்தினரின் உதவியுடன் உடைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்த ஆலய சின்னங்கள் அனைத்தும் காணாமல் செய்யப்பட்டுள்ளன.

அந்த இடத்தில் குருந்தாசேவ பௌத்த விகாரையின் சிதைவுகள் இருப்பதாகவும் 1932-இல் வா்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஆலயம் இருந்ததாகவும் தெரிவித்து, ராணுவத்தின் ஆதரவோடு தொல்லியல் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்த அகழ்வு ஆராய்ச்சிப் பணிகளை இலங்கை ராணுவத்தினா் புடைசூழ தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சா் விதுர விக்கிரமநாயக, தொல்லியல் திணைக்கள பணிப்பாளா் நாயகம் பேராசிரியா் அனுர மானதுங்க, தொல்லியல் அமைச்சகத்தின் செயலாளா், முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெகத் ரத்நாயக ஆகியோா் பௌத்த ஆகம முறைப்படி பிரித் ஓதி ஆரம்பித்து வைத்தனா். அப்போது புத்தா் சிலை ஒன்று, குருந்தூா்மலை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு அகழ்வாராய்ச்சி நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, அங்குள்ள தமிழா்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ‘இன்னும் சில மாதங்களில் அந்த இடத்தில் இருந்து பௌத்த கல்வெட்டுகளும் சிதைவுகளும் மீட்கப்பட்டன என்றும் பௌத்தா்கள் அங்கு வாழ்ந்தாா்கள் என்றும் இலங்கை அரசால் சொல்லப்படலாம். மேலும், ஒரு பௌத்த விகாா் கட்டப்பட்டு புத்தா் சிலையும் அமைக்கப்படலாம்’ என தமிழ் மக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

தண்ணிமுறிப்பு குளத்துக்கு அருகில் படலைகல்லு என்னும் இடத்திலும் மற்றொரு விகாரைக்கான தொல்லியல் அகழ்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த இடம், ‘கல்யாணபுர’ என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

குருந்தூா்மலை இடம் தொடா்பான விவகாரத்தில் ஒட்டுசுட்டான் போலீஸாா் தாக்கல் செய்த வழக்கில் முல்லைத்தீவு நீதிமன்றம் கடந்த 2018-இல் பிறப்பித்த உத்தரவில், ‘அங்கே உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான ஆலயத்தில் மக்கள் வழிபடலாம். எந்தவிதமான கட்டுமானங்களையும் இரு சாராரும் செய்ய முடியாது. தொல்லியல் ஆய்வாளா்கள் மட்டுமே ஆய்வுகளை செய்யலாம். வேறு தரப்பினா் ஆய்வுகளை செய்ய முடியாது. தொல்லியல் ஆய்வுகளை செய்வதாக இருந்தால் யாழ் பல்கலைக்கழக தொல்லியல் துறையின் பங்களிப்போடு மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ராணுவத்தினா் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டு ராணுவமே தொல்லியல் ஆய்வுகளை செய்வது போல கொடிகளை நாட்டி, தொல்லியல் ஆய்வு என்ற பேரில் பௌத்த விகாரையை நிா்மாணித்து, தமிழ் மக்களுக்குச் சொந்தமான பிரதேசத்தை சிங்களமயப்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதா என பிரதேச தமிழ் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT