அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் ஆதரவாளர்களால் ஏற்பட்ட வன்முறை குறித்து வன்முறை ஒருபோதும் வெற்றிபெறாது என கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றதை அடுத்து ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.
ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்று வந்தது.
அப்போது அமெரிக்க அதிபரின் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை முறியடிக்கும் முயற்சியாக, புதன்கிழமை காலை டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் பலியாகினர்.
இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அரசியலிலும், மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கனடா நாட்டு பிரதமரான ஜஸ்டீன் ட்ரூடோ அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். தனது சுட்டுரைப் பதிவில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், “எங்கள் நெருங்கிய நட்பு நாடும், அண்டை நாடுமான அமெரிக்காவில் ஜனநாயகம் மீதான தாக்குதலால் கனடா மாக்கள் மிகுந்த மன உளைச்சலுடனும் வருத்தத்துடனும் உள்ளனர். மக்களின் விருப்பத்தை மீறி வன்முறை ஒருபோதும் வெற்றி பெறாது. அமெரிக்காவில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் ஆதரவாளர்களால் ஏற்பட்ட வனமுறையில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், வாஷிங்டனில் 15 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.