உலகம்

டிரம்பின் சமூக வலைதள கணக்குகள் தற்காலிகமாக முடக்கம்

7th Jan 2021 03:54 PM

ADVERTISEMENT

வன்முறையைத் தூண்டுதல் மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்து தவறான தகவலை தொடர்ச்சியாகப் பரப்பியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பின் சமூக வலைத்தள கணக்குகள்  தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றதை அடுத்து ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.

ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்று வந்தது. 

அப்போது அமெரிக்க அதிபரின் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை முறியடிக்கும் முயற்சியாக, புதன்கிழமை காலை டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் பலியாகினர். 

ADVERTISEMENT

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை சம்பவத்தை தூண்டியது மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காக டிரம்பின் முகநூல், சுட்டுரை மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

உள்ளடக்க விதிகளை மீறியதற்காக எச்சரிக்கப்பட்ட டிரம்ப் தொடர்ச்சியாக அதே செயலில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்கள் தெரிவித்துள்ளன. அதனைத் தொடர்ந்து சுட்டுரை நிறுவனம் அவரது 3 பதிவுகளை நீக்கியதுடன் அவரது பக்கத்தை 12 மணி நேரத்திற்கு முடக்கியுள்ளது.

அதேபோல் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களும் அவரது பக்கத்தை 24 மணி நேரத்திற்கு முடக்கியுள்ளன. அதேபோல் யூடியூப் நிறுவனம் உள்ளடக்க விதிகளை மீறியதாக டிரம்பின் காணொலிகளை நீக்கியுள்ளது.

Tags : Donald trump
ADVERTISEMENT
ADVERTISEMENT