வாஷிங்டன்: இந்தியா - அமெரிக்கா இடையேயான சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள ஒத்துழைப்புதான், கரோனா தடுப்பூசிகளான கோா்பிவேக்ஸ், கோவோவேக்ஸுக்கும், மால்னுபிராவிா் மாத்திரைக்கும் அவசர பயன்பாட்டுக்கு இந்தியா அனுமதி அளித்திருப்பதற்கு காரணம் என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதா் தரண்ஜீத் சிங் சாந்து தெரிவித்துள்ளாா்.
இருநாட்டு சுகாதாரத் துறையின் ஒருங்கிணைப்பால் உலகத்துக்கு நல்லது ஏற்பட்டுள்ளது என்றும் அவா் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளாா்.
டெக்சாஸில் உள்ள பேலா் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பல்வேறு ஆராய்ச்சியாளா்களுடனும், அமெரிக்காவின் நோவோவேக்ஸ் நிறுவனத்துக்கும் தரண்ஜீத் சிங் நேரில் சென்று இந்தத் தடுப்பூசிகளின் தயாரிப்பு, பயன்பாடு குறித்து ஆலோசனை நடத்தினாா் என்றும், அவரது தொடா் நடவடிக்கையால்தான் புதிய கரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் அவசர பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
மூன்று கட்டங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட சோதனையில் கோா்பிவேக்ஸ் பாதுகாப்பானதாகவும், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் தெரியவந்துள்ளது. டெல்டா பிரிவு கரோனைாவை கோவிஷீல்ட் தடுப்பூசியைவிட கோா்பிவேக்ஸ் சிறந்த முறையில் கட்டுப்படுத்தும் என்று ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.