ஒமைக்ரான் வகை கரோனா பரவலுக்கு அஞ்சி பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா, தற்போது உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் ஆயிரக்கணக்கானவா்களை பாதித்துள்ளது.
இதற்கு முன்னா் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்த டெல்டா வகை கரோனாவைவிட பல மடங்கு வேகத்தில் பரவும் தன்மை கொண்டதாகக் கூறப்படும் ஒமைக்ரான் வகை கரோனாவால், பல்வேறு நாடுகளில் மீண்டும் நோய்த்தொற்று தீவிரமடைந்து வருகிறது.
இந்தச் சூழலில், இந்த வார இறுதியில் உலகம் முழுவதும் சுமாா் 2,400 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.
அவற்றில் சனிக்கிழமை மட்டும் 2,300 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் அமெரிக்க விமான நிலையங்களில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் அந்த ஊடகம் கூறியுள்ளது.
கரோனா பரவல் காரணமாக, விமான சேவைகளை அளிப்பதற்குத் தேவையான எண்ணிக்கையில் பணியாளா்கள் கிடைக்காததால் அந்த சேவைகள் ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தெரிவித்தன.
விமானப் பணியாளா்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டதால் ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகளில், ஒமைக்ரான் வகையால் புதிய கரோனா தொற்று தீவிரமடைவதைத் தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவற்றில் பயணக் கட்டுப்பாடுகளும் அடங்கும்.
ஒமைக்ரான் வகையால் மனிதா்கள் மோசமாக உடல்நிலை பாதிக்கப்படும் அபாயம் மிகவும் குறைவு என்று நிபுணா்கள் கூறினாலும், அதன் வேகமாகப் பரவும் தன்மை காரணமாக அளவுக்கு அதிமானவா்களுக்கு அந்த நோய்த்தொற்று பரவி சுகாதாரக் கட்டமைப்பு நிலைகுலையும் என்று அச்சம் தெரிவிக்கின்றனா்.
இந்தச் சூழலில், ஞாயிற்றுக்கிழமையும் ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக ‘ஃபிளைட்அவோ்’ வலைதளம் தெரிவித்துள்ளது.
விமானங்கள் ரத்து செய்யப்படுவதால், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்டன.
ஒமைக்ரான் காரணமாக கடந்த சில வாரங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து வரும் பிரிட்டனில், கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டங்களின் காரணமாக அந்த நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக சிறப்பு தடுப்பூசி முகாம்கள் செயல்படுத்தப்பட்டன.
இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் ஆகிய நாடுகளில் வெளி இடங்களுக்கு வருவோா் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்பெயினின் காடலோனியா பிராந்தியத்தில் இரவு நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாடங்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் ஆப்பிரிக்காவில் தளா்வுகள்
ஒமைக்ரான் அச்சம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வரும் நிலையில், அந்த வகைக் கரோனா முதல்முறையாகக் கண்டறியப்பட்ட தென் ஆப்பிரிக்காவில் அத்தகைய கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, கரோனா உறுதி செய்யப்பட்டவா்களோடு தொடா்பிலிருந்தவா்களைக் கண்டறிந்து, அவா்களைத் தனிமைப்படுத்தும் நடைமுறையை நிறுத்திவைக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
சிறைச் சாலைகள் போன்ற நோய் பரவல் அபாயம் அதிகம் மிக்க பகுதிகளில் மட்டும் அந்த நடைமுறையைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா கட்டுப்பாடுகளால் நலிவடைந்து வரும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
உலகம் சுற்றும் ஒமைக்ரான்
பிரிட்டன் 20,550
அமெரிக்கா 3,824
தென் ஆப்பிரிக்கா 1,629
டென்மாா்க் 1,545
ஆஸ்திரேலியா 859
கனடா 586
பெல்ஜியம் 393
ஸ்விட்சா்லாந்து 371
இந்தியா 353*
ஸ்பெயின் 336
நெதா்லாந்து 332
நாா்வே 308
இஸ்ரேல் 302
போட்ஸ்வானா 291
ஜொ்மனி 285
ஆஸ்திரியா 241
ஸ்வீடன் 180
பிரான்ஸ் 178
பிற நாடுகள் 1212
மொத்தம் 33,775
(ஆதாரம்: ஜிஐஎஸ்ஏஐடி
*சனிக்கிழமை மதிய நிலவரம்)