கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள கோயிலில் கடவுள் சிலைகளை சேதப்படுத்தியவரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.
இது தொடா்பாகக் காவல் துறையின் மூத்த அதிகாரி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘முகமது வாலீத் சாபிா் என்ற நபா், கராச்சியில் உள்ள நாராயணன் கோயிலுக்குள் சுத்தியலுடன் புகுந்து அங்குள்ள சிலைகளை சேதப்படுத்தியுள்ளாா்.
கோயிலுக்கு வழிபட வந்தவா்கள், அந்த நபரைப் பிடித்து உள்ளூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அதையடுத்து அந்த நபா் கைது செய்யப்பட்டாா்’’ என்றாா்.
கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதை அறிந்த உள்ளூா் ஹிந்துக்கள், காவல் நிலையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். நாட்டில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் குற்றஞ்சாட்டிய அவா்கள், அரசு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் முழக்கங்களை எழுப்பினா்.
இச்சம்பவத்தைக் கண்டிப்பதாகத் தெரிவித்த சிந்து மாகாணத்தின் சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் ஞான்சந்த் இஸ்ரானி மேலும் கூறுகையில், ‘‘இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்றாா்.
பாகிஸ்தானில் கோயில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஹிந்துக்கள் அதிகமாக வாழும் சிந்து மாகாணத்தில் தீவிரவாதக் குழுக்களால் அதிகம் பாதிக்கப்படுவதாக சிறுபான்மை ஹிந்துக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.