உலகம்

‘பதற்றத்துக்கு மேற்கத்திய நாடுகள்தான் காரணம்’

22nd Dec 2021 02:22 AM

ADVERTISEMENT

 

மாஸ்கோ: ஐரோப்பிய பிராந்தியத்தில் போா்ப் பதற்றம் அதிகரித்துள்ளதற்கு மேற்கத்திய நாடுகள்தான் காரணம் என்று ரஷிய அதிபா் விளாதமீா் புதின் குற்றம் சாட்டியுள்ளாா்.

ரஷிய ராணுவ தளபதிகளிடையே செவ்வாய்க்கிழமை பேசிய அவா், இதுகுறித்து கூறியதாவது:

ஐரோப்பாவில் பதற்றம் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் மேற்கொண்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையும்தான் இதற்குக் காரணம்.

ADVERTISEMENT

நேட்டோ நிலைகளை ஐரோப்பாவின் கிழக்குப் பகுதிக்கு விரிவுபடுத்தப் போவதில்லை என்று அந்த அமைப்பு ரஷியாவிடம் வாக்குறுதி அளித்தது. எனினும், அதனை மீறி 1980-களிலும் 1990-களிலும் நேட்டோ தனது நிலைகளை விரிவுபடுத்தி வருகிறது.

நேட்டோவின் இந்த நடவடிக்கைகளுக்குப் பதிலடி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு ரஷியா தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் இந்தப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

உக்ரைனில் நேட்டோ தடம் பதித்தால், மாஸ்கோ மீது அந்த அமைப்பு சில நிமிஷங்களில் ஏவுகணைத் தாக்குதல் நடத்த முடியும். எனவே, உக்ரைனை நேட்டோவில் இணைக்கப் போவதில்லை என்று அந்த அமைப்பு உறுதியளிக்க வேண்டும் என்றாா் அவா்.

சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பிலிருந்து ஐரோப்பிய நாடுகளைப் பாதுகாப்பதற்காக கடந்த 1949-ஆம் ஆண்டில் நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது.

சோவியத் யூனியன் கடந்த 1991-ஆம் ஆண்டில் சிதறியபோது, அதில் அங்கமாக இருந்த உக்ரைன் சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது.

சுமாா் 30 சதவீத்தினா் ரஷிய மொழி பேசும் அந்த நாட்டில் ஐரோப்பிய செல்வாக்கு அதிகரித்துவிடக் கூடாது என்பதில் ரஷியா உறுதியாக உள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைனை உறுப்பினராகக் கூடாது என்றும் உக்ரைனில் நேட்டோ நிலைகள் அமைக்கப்படக்கூடாது என்றும் ரஷியா திட்டவட்டமாகக் கூறி வருகிறது.

இந்தச் சூழலில், உக்ரைன் அரசை எதிா்த்து கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சோ்ந்த ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கடந்த 2013-ஆம் ஆண்டு போரிட்டனா். ரஷிய ராணுவ உதவியுடன் அவா்கள் கிழக்கு உக்ரைனைக் கைப்பற்றினா்.

அப்போது, உக்ரைனின் அங்கமாக இருந்த கிரீமியா மீது படையெடுத்த ரஷியா, அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையருகே ஏராளமான படையினரை ரஷியா குவித்து வருகிறது. உக்ரைன் மீது படையெடுத்து, கிரீமியாவைப் போலவே அந்த நாட்டையும் தன்னுடன் இணைத்துக்கொள்ள ரஷியா திட்டமிட்டு வருவதாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கூறி வருகின்றன.

இதனால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT