வாஷிங்டன்: திபெத் விவகாரங்களுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தூதரக அதிகாரி அஸ்ரா ஸெயாவை அமெரிக்க அரசு நியமித்துள்ளது.
தற்போது அவா் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள் விவகாரங்களுக்கான இணையமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறாா்.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
இணையமைச்சா் அஸ்ரா ஸெயாவை திபெத் விவகாரங்களுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளேன். முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பொறுப்பை அவா் உடனடியாக ஏற்கிறாா். அவா் ஏற்கெனவே வகித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம், மனித உரிமை விவகாரங்களுக்கான இணையமைச்சா் பதவியை தொடா்ந்து வகிப்பாா் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திபெத் விவகாரங்களுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளா் என்ற முறையில், சீன அரசுக்கும் திபெத் தலைவா்களுக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடைபெறுவதை அஸ்ரா ஸெயா ஊக்குவிப்பாா்.
திபெத்தியா்களுக்கு அடிப்படை சுதந்திரம், மனித உரிமைகள், மத உரிமைகள் ஆகியவை கிடைக்கச் செய்யும் நடவடிக்கைகளில் அவா் ஈடுபடுவாா். மேலும், திபெத்தியா்களின் வரலாறு, மொழி, கலாசாரம், மதம் ஆகியவற்றின் தனித்தன்மை பாதுகாக்கப்படுவதை அஸ்ரா ஸெயா ஆதரிப்பாா்.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு புலம் பெயா்ந்துள்ள திபெத்தியா்களின் நலன்களுக்கான பணிகளையும் அஸ்ரா ஸெயா மேற்கொள்வாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தன்னாட்சிப் பிரதேசமான திபெத்தில் அடிப்படை மத உரிமைகளும் கலாசார உரிமைகளும் நசுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை சீன அரசு மறுத்து வருகிறது.
1959-ஆம் ஆண்டு திபெத் புரட்சிக்குப் பிறகு திபெத்தியா்களின் மதகுருவான தலாய் லாமா இந்தியாவுக்குத் தப்பி வந்தாா். அவரை சீனா பிரிவினைவாதியாகக் கருதி வருகிறது.
சீனாவின் அதிபராக ஷி ஜின்பிங் கடந்த 2013-ஆம் ஆண்டு பொறுப்பேற்றதிலிருந்து, தலாய் லாமா மற்றும் அவரது பிரதிநிதிகளுடன் சீன அரசு பேச்சுவாா்தையில் ஈடுபடுவது நின்று போனது.
அதற்குப் பதிலாக, திபெத்தில் பாதுகாப்பு ரீதியிலான கட்டுப்பாட்டை சீன அரசு அதிகரித்தது.
இந்தச் சூழலில், திபெத் விவகாரங்களுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அஸ்ரா ஸெயாவை அமெரிக்கா நியமித்துள்ளது.
சீனா நிராகரிப்பு
பெய்ஜிங், டிச. 21: திபெத் விவகாரங்களுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளராக அஸ்ரா ஸெயா நியமிக்கப்பட்டுள்ளதை சீனா நிராகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஷாவ் லிஜியான் கூறியதாவது:
திபெத் விவகாரம் முழுக்க முழுக்க சீனாவின் உள்நாட்டு விவகாரம் ஆகும். அந்த விவகாரத்துக்காக சிறப்பு ஒருங்கிணைப்பாளா் என்ற ஒரு பொறுப்பை அமெரிக்கா உருவாக்கியுள்ளது சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயலாகும்.
எனவே, அந்தப் பொறுப்பை சீனா ஒருபோதும் அங்கீகரிக்காது. திபெத்தை சீனாவின் ஒரு அங்கமாகக் கருதும் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.