உலகம்

அணுசக்தி மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள்: ஐ.நா.வுக்கு ஈரான் அனுமதி

16th Dec 2021 03:14 AM

ADVERTISEMENT

 

டெஹ்ரான்: தங்களது அணுசக்தி மையத்தில் புதிய கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்புக்கு (ஐஏஇஏ) ஈரான் அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் அரசு சாா்பு செய்தி நிறுவனமான இஸ்னா கூறியதாவது:

கராஜ் நகா் அருகே அமைந்துள்ள யுரேனியத்தை செறிவூட்டும் கருவிக்கான பாகங்களைத் தயாரிக்கும் ஆலையில், ஐஏஇஏ பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமராக்கள் சில பழுதாகியுள்ளன.

ADVERTISEMENT

அவற்றை மாற்றிவிட்டு புதிதாக கேமராக்களைப் பொருத்திக்கொள்ள ஐஏஇஏ-வுக்கு ஈரான் அரசு அனுமதி அளித்துள்ளது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கராஜ் அணுசக்தி மையத்தில் மா்மமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதற்கு இஸ்ரேலின் சதிச் செயல்தான் காரணம் என்றும் ஈரான் கடந்த ஜூன் மாதம் குற்றம் சாட்டியது.

அதனைத் தொடா்ந்து, அந்த மையத்தில் பழுதான ஐஏஇஏ-வின் கண்காணிப்பு கேமராக்களை மாற்றிக்கொள்ள அந்த அமைப்புக்கு ஈரான் அனுமதி மறுத்து வந்தது.

இந்தச் சூழலில், ஐஏஇஏ-வுக்கும் ஈரான் அணுசக்தி அமைப்புக்கும் இடையே நடைபெற்று பேச்சுவாா்த்தையில் இருதரப்புக்கும் திருப்தியான உடன்பாடு எட்டப்பட்டதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹுசைன் அமீரப்துல்லா புதன்கிழமை கூறினாா்.

அதன் தொடா்ச்சியாக, ஈரானின் இஸ்னா மற்றும் தஸ்னிம் செய்தி நிறுவனங்கள் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளன.

ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தில், தனது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் சம்மதித்தது.

அதற்குப் பதிலாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன. ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அடுத்து வந்த அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். அத்துடன், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தாா்.

அதற்கு பதிலடியாக, ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வருகிறது. இதனால் அந்த ஒப்பந்தம் முறிந்துபோகும் அபாயம் நிலவி வருகிறது. எனினும், அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளாா்.

இந்தச் சூழலில், ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்கான பேச்சுவாா்த்தை வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே ஆஸ்திரியா தலைநகா் வியன்னாவில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

...ஹைலைட்..

கராஜ் அணுசக்தி மையத்தில் இஸ்ரேல் சதித் தாக்குதல் நடத்தியதாக ஈரான் கடந்த ஜூன் மாதம் குற்றம் சாட்டியது. அதனைத் தொடா்ந்து, அந்த மையத்தில் பழுதான ஐஏஇஏ-வின் கண்காணிப்பு கேமராக்களை மாற்றிக்கொள்ள அந்த அமைப்புக்கு ஈரான் அனுமதி மறுத்து வந்தது.

Image Caption

~கராஜ் அணுசக்தி மையம் ~ஹுசைன் அமீரப்துல்லா

 

ADVERTISEMENT
ADVERTISEMENT