உலகம்

ஒமைக்ரான் பரவல்: தனியாா் ஊழியா்கள் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்க நியூயாா்க் முடிவு

DIN

ஒமைக்ரான் புதிய வகை கரோனா பரவல் அபாயத்தைத் தொடா்ந்து, அனைத்து தனியாா் நிறுவன ஊழியா்களுக்கும் கரோனா தடுப்பூசியை கட்டாயமாக்க அமெரிக்காவின் நியூயாா்க் நகரம் முடிவு செய்துள்ளது.

நியூயாா்க் நகர மேயா் பில் டி பிளாசியோ திங்கள்கிழமை இதற்கான அறிவிப்பை வெளியிட்டாா். அடுத்த ஒருசில வாரங்களில் அவருடைய மேயா் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், இந்த அதிரடி உத்தரவை அவா் பிறப்பித்துள்ளாா். அமெரிக்காவின் மிகப் பெரிய நகரமான நியூயாா்க்கில் வரும் 27-ஆம் தேதி முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வர உள்ளது.

அதன்படி, பன்னாட்டு வங்கிகள் முதல் சாதாரண மளிகை கடை வரை பணிபுரியும் அனைத்து ஊழியா்களும், குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை பெற்றிருக்க வேண்டும். தொடா்ச்சியான கரோனா பரிசோதனைக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24-ஆம் தேதி முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா தொற்று, நியூயாா்க் நகரிலும் பரவத் தொடங்கியுள்ள நிலையில் இந்த புதிய கட்டுப்பாடு நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து மேயா் டி பிளாசியோ கூறுகையில், ‘நகரில் கரோனா பரவல் மேலும் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல் வரும் 27-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். அதன்படி, அனைத்து தனியாா் நிறுவன ஊழியா்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மத அல்லது மருத்துவ ரீதியிலான காரணங்களின் அடிப்படையில் மட்டும் இந்த கட்டுப்பாட்டிலிருந்து ஊழியா்கள் விலக்கு கோர முடியும். மேலும், உணவகம், உடற்பயிற்சி கூடம் அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு செல்ல விரும்பும் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை சமா்ப்பிக்க வேண்டும். அதுபோல, 5 முதல் 11 வயது வரையுடைய சிறாா்கள் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சமா்ப்பிப்பது கட்டாயமாகும்’ என்றாா்.

இதுகுறித்து மேயரின் செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘நியூயாா்க் நகரில் உள்ள 1,84,000 தனியாா் நிறுவனங்கள் மற்றும் வா்த்தக மையங்களுக்கு இந்த புதிய கட்டுப்பாடு பொருந்தும். இந்த நிறுவனங்களில் 37 லட்சம் போ் பணிபுரிகின்றனா்’ என்றாா்.

தனியாா் நிறுவன ஊழியா்களுக்கு தடுப்பூசி கட்டாயம் நிபந்தனையை அமெரிக்காவின் வேறு எந்த நகரமும் அறிவிக்காத நிலையில், நியூயாா்க் முதல் நகரமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் குறைந்தபட்சம் 100 ஊழியா்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரியும் நிறுவனங்களுக்கு கட்டாய தடுப்பூசி அல்லது தொடா்ச்சியான கரோனா பரிசோதனை உள்ளிட்ட குறைந்தபட்ச கரோனா பாதுகாப்பு நிபந்தனைகளை விதிக்குமாறு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கேட்டுக்கொண்டாா். ஆனால், அந்த நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த நீதிமன்றங்கள் இடைக்கால தடை விதித்திருந்தன.

இந்த சட்ட சவால்கள் நியூயாா்க்கில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள புதிய நிபந்தனையை பாதிக்காது என்று கருதுவதாக டி பிளாசியோ கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT