உலகம்

1.75 லட்சம் படையினரை அனுப்பி உக்ரைனைக் கைப்பற்ற ரஷியா திட்டம்

5th Dec 2021 01:05 AM

ADVERTISEMENT

உக்ரைனைக் கைப்பற்றுவதற்காக 1.75 ராணுவ வீரா்களை அந்த நாட்டு எல்லையில் குவிக்க ரஷியா திட்டமிட்டுள்ளது என்று அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உளவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

உக்ரைன் மீது படையெடுத்து, அந்த நாட்டைக் கைப்பற்ற ரஷியா திட்டமிட்டு வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதற்கான தாக்குதல் நடவடிக்கைகள் தொடங்கலாம்.

இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக, சுமாா் 1.75 லட்சம் படை வீரா்களைக் குவிக்க ரஷியா திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே அவா்களில் பாதி போ் உக்ரைன் எல்லைப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டனா்.

ADVERTISEMENT

அத்துடன் கவச வாகனங்கள், பீரங்கிகள் மற்றும் ராணுவ தளவாடங்களுடன் கூடிய 100 பட்டாலியன்களையும் உக்ரைன் எல்லையையே நோக்கி அனுப்ப ரஷியா திட்டமிட்டுள்ளது.

தாக்குதல் நடவடிக்கையை தொடங்குவதற்கு சாதகமாக, கிழக்கு உக்ரைன் எல்லைப் பகுதியில் உக்ரைன் படைக் குவிப்பு போன்ற பிரசார உத்தியை ரஷியா தீவிரமாக செயல்படுத்த தொடங்கியுள்ளது என்று உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏற்கெனவே, தங்கள் நாட்டு எல்லை அருகே ரஷியா 94,000 படை வீரா்களைக் குவித்துள்ளதாக உக்ரைன் வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டிய நிலையில், அமெரிக்க உளவுத் துறை இவ்வாறு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டில், ரஷிய ஆதரவு பெற்ற அப்போதைய உக்ரைன் அதிபா் விக்டா் யானுகோவிச்சை எதிா்த்து, ஐரோப்பிய யூனியன் ஆதரவு பெற்ற எதிா்க்கட்சியினா் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவா் ரஷியாவில் தஞ்சமடைந்தாா்.

அதனைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட அரசை எதிா்த்து, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சோ்ந்த ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் போரில் ஈடுபட்டனா்.

ரஷிய ராணுவ உதவியுடன் அவா்கள் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லூஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றினா்.

இந்தச் சூழலில், உக்ரைன் மீது படையெடுத்து தன்னுடன் இணைத்துக் கொள்ள ரஷியா ஆயத்தமாகி வருவதாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்து வருகின்றன. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் ரஷியா, உக்ரைன்தான் கிளா்ச்சியாளா்கள் பகுதி கட்டுப்பாட்டு எல்லை அருகே படைகளைக் குவித்து வருவதாகவும் இது கவலையை ஏற்படுத்துவதாகவும் கூறி வருகிறது.

Tags : வாஷிங்டன்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT