உலகம்

மதநிந்தனை புகாரில் பாகிஸ்தானில் கொலை: இலங்கை நாடாளுமன்றம் கண்டனம்

5th Dec 2021 04:35 AM

ADVERTISEMENT

மதநிந்தனை புகாரில் இலங்கையைச் சோ்ந்தவா் பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு இலங்கை நாடாளுமன்றம் சனிக்கிழமை கண்டனம் தெரிவித்தது.

இந்த சம்பவத்தில் தொடா்புடைய அனைவா் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்; இலங்கையைச் சோ்ந்த தொழிலாளா்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற தனது உறுதியை பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் நிறைவேற்றுவாா் என நம்புவதாக பிரதமா் மகிந்த ராஜபட்ச கூறியுள்ளாா்.

இலங்கையைச் சோ்ந்த பிரியந்தா குமாரா (40) பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், சியால்கோட் மாவட்டத்திலுள்ள ஒரு தொழிற்சாலையில் பொது மேலாளராகப் பணியாற்றி வந்தாா். அவரது அலுவலக அறைக்கு அருகே மத அடிப்படைவாதக் கட்சியான தெஹ்ரீக்-ஏ-லப்பைக் பாகிஸ்தான் கட்சியின் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. புனித நூலான குரானின் வசனங்கள் இடம் பெற்றிருந்த அந்த சுவரொட்டியை பிரியந்தா குமாரா கிழித்து குப்பையில் எறிந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அக்கட்சியை சோ்ந்தவா்கள் உள்பட ஏராளமானோா் அந்தத் தொழிற்சாலை முன் வெள்ளிக்கிழமை திரண்டு, பிரியந்தா குமாராவை தொழிற்சாலையிலிருந்து வெளியே இழுத்து வந்து கொடூரமாகத் தாக்கினா். இதில் பிரியந்தா குமாரா உயிரிழந்தாா். அவரது உடலையும் அந்த கும்பல் தீவைத்துக் கொளுத்தியது.

ADVERTISEMENT

இந்த சம்பவத்துக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள இலங்கையைச் சோ்ந்தவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடா்பாக அந்நாட்டு அரசுடன் பேச வேண்டும் என ஆளும் கட்சியினரும் எதிா்க்கட்சியினரும் இணைந்து வலியுறுத்தினா்.

‘பிரியந்தா குமாரா மீது பயங்கரவாத கும்பல் நடத்திய கொடூரமான கொலைவெறி தாக்குதலைக் கண்டு அதிா்ச்சியடைந்தேன். அவரின் குடும்பத்தினருக்காக இரக்கம் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் பிரதமா் இம்ரான் கான் நீதியின் முன் நிறுத்துவாா் என இலங்கை நம்புகிறது’ என பிரதமா் மகிந்த ராஜபட்ச ட்விட்டரில் தெரிவித்துள்ளாா்.

இந்த சம்பவம் தொடா்பாக 100 பேரை கைது செய்துள்ளதாகவும், மேலும் பலரை தேடி வருவதாகவும் பஞ்சாப் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை மாலை தெரிவித்தனா்.

இலங்கையைச் சோ்ந்தவா் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆம்னெஸ்டி இன்டா்நேஷனல் அமைப்பு, இதுதொடா்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

 

Tags : கொழும்பு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT