உலகம்

ஒமைக்ரானால் இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்படுமா?: மூத்த விஞ்ஞானி தகவல்

4th Dec 2021 12:09 PM

ADVERTISEMENT

ஒமைக்ரான் வகை கரோனா உலக நாடுகளை அச்சுறுத்திவரும் நிலையில், இது 38 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே, அதிக மாறுதல்களை கொண்ட புதிய உருமாறிய கரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.

ஒமைக்ரான் எந்தளவுக்கு பரவல் தன்மை கொண்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க இன்னும் இரண்டு வாரங்களாகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல், தீவிர உடல் நல பாதிப்பை அது ஏற்படுத்துகிறதா, அதற்கான சிகிச்சை எந்தளவுக்கு பயன் தருகிறது, தடுப்பூசி எந்தளவுக்கு செயல்படுகிறது என்பதை தெரிந்த கொள்ளவும் இரண்டு வாரங்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மக்கள் மத்தியில் அச்சம் நிலவிவருகிறது. இந்நிலையில், சிஎஸ்ஐஆர் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் இயக்குநர் அனுராக் அகர்வால் இதுகுறித்து கூறுகையில், "இந்தியாவில் 3ஆவது அலையை உருவாக்கும் அனைத்து அம்சங்களையும் இந்த ஒமைக்ரான் உருமாறிய கரோனா கொண்டுள்ளது. 

தற்போதுள்ள தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, இந்த உருமாறிய கரோனா மிகவும் சக்திவாய்ந்த நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருக்கலாம் என்றே கருதுகிறேன். வேகமாக மேற்கொள்ளப்படும் ஆர்டி-பிசிஆர் சோதனை, கட்டாய தனிமைப்படுத்தல் ஆகியவை தான் ஒமைக்ரான் பாதிப்பைக் கட்டுப்படுத்தும்.

ADVERTISEMENT

கரோனா வைரசில் இருந்து குணமடைந்த பிறகு, தடுப்பூசி செலுத்தியவர்களுக்குத் தான் அதிகபட்ச தடுப்பாற்றல் இருக்கிறது. இந்தியாவில் தடுப்பூசி பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது. இருப்பினும், மக்கள்தொகையில் குறிப்பிட்ட சதவீதம் பேர் இன்னும் கூட தடுப்பூசி போடத் தயக்கம் காட்டுகின்றனர். அவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

அதேநேரம், டெல்டா கரோனா நாட்டில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், ஒமைக்ரான் வைரஸ் அந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றே மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்கஒமைக்ரான் கரோனாவின் தீவிரத்தன்மை குறைவாக இருக்க வாய்ப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "ஒமைக்ரான் வகையின் குணாதிசயங்களைக் கருத்தில் கொண்டால், இது இந்தியா உட்பட பல நாடுகளுக்கு பரவ வாய்ப்புள்ளது. தடுப்பூசியின் வேகம் மற்றும் டெல்டா வகைக்கு பிறகு பெறப்பட்ட இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு காரணமாக நோயின் தீவிரம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தென்னாப்பிரிக்காவிற்கு வெளியே உள்ள நாடுகளில் இருந்து ஒமைக்ரான் அதிகளவில் பதிவாகி வருகின்றன. தற்போதுள்ள தடுப்பூசிகள் ஒமைக்ரானுக்கு எதிராக வேலை செய்யாது என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தடுப்பூசி பாதுகாப்பு என்பது ஆன்டிபாடிகள் மற்றும் செல்லுலார் நோய் எதிர்ப்பு சக்தி மூலமாகவும் உள்ளது.

எனவே, தடுப்பூசிகள் இன்னும் கடுமையான நோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் கிடைக்கக்கூடிய தடுப்பூசிகளை கொண்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதும் முக்கியம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : omicron CSIR third wave
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT