உலகம்

பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள்: கும்பல் படுகொலை குறித்து இம்ரான் கான்

4th Dec 2021 02:52 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் இலங்கை நாட்டவரான தொழிற்சாலை மேலாளர் மீது குறிப்பிட்ட கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி, தீ வைத்து எரித்து படுகொலை செய்துள்ளது. இந்த சம்பவத்தை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால், படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடவுள் குறித்து கருத்து தெரிவிப்பதே சர்ச்சைக்குரியதாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமை அவமதித்துவிட்டதாக புகார் எழுந்தாலே, அங்கு போராட்டம் வெடித்து படுகொலைகள் நிகழ்வது தொடர்கதையாகிவருகிறது. இந்நிலையில், இலங்கை நாட்டவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "கும்பல் நடத்திய இந்த கொடூர தாக்குதல் தொடர்பான விசாரணை மீது தனிப்பட்ட அளவில் கவனம் செலுத்துவேன். எந்த தவறும் செய்யக்கூடாது, இதற்கு காரணமானவர்கள் அனைவரும் சட்டத்தின் வழியாக கடுமையுடன் தண்டிக்கப்படுவார்கள்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 200 கிமீ தொலைவில் உள்ள சியால்கோட்டில்தான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கும்பல் வன்முறை தொடர்பாக சமூகவலைதளத்தில் பல விடியோக்கள் பகிரப்பட்டுள்ளன. அதில், பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை கும்பல் சேர்ந்து தாக்குவது போல பதிவாகியுள்ளது. அப்போது, இறை நிந்தனைக்கு எதிராக அக்கும்பல் கோஷம் எழுப்பியது போல தெரிகிறது.

ADVERTISEMENT

இதையும் படிக்கஒமைக்ரான் கரோனாவின் தீவிரத்தன்மை குறைவாக இருக்க வாய்ப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்

மற்றொரு விடியோவில், ஒருவரின் உடல் மீதும் சேதப்படுத்தப்பட்ட கார் மீதும் தீ வைத்து எரிப்பது போல பதிவாகியுள்ளது. மேலும், அந்த நபர்கள் தங்களின் அடையாளத்தை மறைத்து கொண்டு, எரிக்கப்பட்ட உடல் முன்பு நின்று செல்பி எடுப்பது போலவும் விடியோவில் பதிவாகியுள்ளது.

கும்பல் படுகொலை தொடர்பாக 50 நபர்களை கைது செய்துள்ளதாக பஞ்சாப் அரசின் செய்தித்தொடர்பாளர் ஹசன் கவார் தெரிவித்துள்ளார். லாகூரில் செய்தியாளர் சந்தித்த அவர் இதுகுறித்து விரிவாக கூறுகையில், "48 மணி நேரத்திற்குள் விசாரணையை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், சிசிடிவி காட்சிகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்" என்றார்.

Tags : Pakistan imran khan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT