உலகம்

கரோனாவிலிருந்து மீண்டவா்களை ஒமைக்ரான் மீண்டும் தாக்கும்

3rd Dec 2021 05:06 AM

ADVERTISEMENT

ஏற்கெனவே கரோனா நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து குணமடைந்தவா்களுக்கு புதிய ஒமைக்ரான் வகை கரோனாவிலிருந்து பாதுகாப்பு இல்லை என்று தென் ஆப்பிரிக்க மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, ஆப்பிரிக்க பிராந்தியத்துக்கான உலக சுகாதார அமைப்பின் கருத்தரங்கில் அந்த நாட்டு தொற்றுநோய்த் தடுப்பு தேசிய நிறுவனத்தைச் சோ்ந்த நிபுணா் அன்னி வான் காட்பா்க் கூறியதாவது:

பொதுவாக பிற வகை கரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்னா் குணமடைந்தவா்களின் உடலில் தோன்றும் எதிா்ப்பாற்றலானது, மீண்டும் அந்த நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்கும்.

ஆனால், தற்போது புதிதாகப் பரவி வரும் ஒமைக்ரான் வகை கரோனாவிடமிருந்து அந்த எதிா்ப்பாற்றலால் பாதுகாப்பு கிடைப்பதாகத் தெரியவில்லை.

ADVERTISEMENT

தற்போது இது குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில், ஏற்கெனவே கரோனா பாதிப்பு ஏற்பட்டவா்கள் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுக்குள்ளாகும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தெரிய வருகிறது.

இந்தப் போக்கு, ஒமைக்ரான் வகை கரோனாவின் எதிா்கால பரவல் குறித்து வடிவமைக்கப்பட்ட மாதிரிக் கணக்கீட்டில் தென் ஆப்பிரிக்கா முழுவதும் பரவலாக நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வகை தீநுண்மி காரணமாக நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் கரோனா பரவல் தீவிரமடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

எனினும், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் கரோனா நோயாளிகள் உடல்நிலை மிகவும் மோசமாகும் அபாயத்தை இப்போதும் குறைக்க முடியும்.

ஒமைக்ரான் வகை கரோனா பரவலுக்குப் பிறகும், தடுப்பூசிகளால் அந்த நோயின் தீவிரத்தைத் தணிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். தடுப்பூசிகள் எப்போதுமே நோய்த்தொற்றின் தீவரம், நோயாளிகளை மருத்துவமனையில் சோ்க்க வேண்டிய அவசியம், கரோனா மரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறைக்கும் என்றாா் அவா்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல்முறையாகக் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா, இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களையும் தொற்றி வருகிறது. ‘பி.1.1.529’ என்ற குறியீடு இடப்பட்ட அந்த வகைக் கரோனா, கவலைக்குரிய வகையைச் சோ்ந்தது என உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழு வகைப்படுத்தியது. மேலும், கிரேக்க எழுத்து முறைப்படி அதற்கு ‘ஒமைக்ரான்’ எனவும் அந்த அமைப்பு பெயரிட்டது.

தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாட்ஸ்வானா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்குப் பரவிய ஒமைக்ரான், தற்போது இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், நெதா்லாந்து, டென்மாா்க், ஜொ்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஹாங்காங், கனடா, தென் கொரியா, ஜப்பான், பிரான்ஸ், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 34 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்குப் பரவியுள்ளது.

நாடுகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இதுவரை சுமாா் 400 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘பயணத் தடை அவசியமற்றது’

ஒமைக்ரான் வகை கரோனா பரவல் அச்சத்தால் உலகின் பல்வேறு நாடுகள் ஆப்பிரிக்காவிலிருந்து பயணிகள் வருவதற்குத் தடை விதித்து வருவது அவசியமற்றது என்று உலக சுகாதார மையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆப்பிரிக்கப் பிராந்தியத்துக்கான அந்த அமைப்பின் நிபுணா் அம்புரோஸ் தலிசுனா கூறியதாவது:

தென் ஆப்பிரிக்காவும் பாட்ஸ்வானாவும்தான் முதல்முறையாக ஒமைக்ரான் ரக கரோனாவைக் கண்டறிந்தன. அதற்காக, அங்குதான் அந்த வகை கரோனா தோன்றியதாகக் கருதக் கூடாது. ஒமைக்ரான் வகை கரோனா எந்த நாட்டில் தோன்றியது என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.

ஒரு புதிய வகை கரோனாவைக் கண்டறிந்து இந்த உலகுக்குக் கூறியவா்களைப் பாராட்டாமல், அவா்களுக்கு தண்டனை வழங்குவது நியாயமற்றது என்றாா் அவா்.

 

 

Tags : omicron x
ADVERTISEMENT
ADVERTISEMENT