தலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக மக்கள் போராட்டம் நடத்தினர்.
ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றிய தலிபான்கள், ஆட்சி அமைப்பதில் மும்முரம் காட்டிவருகின்றனர். இதனிடையே, தலிபான்களை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
சுதந்திர தினமான நேற்று (வியாழக்கிழமை) தேசிய கொடி ஏந்தி மக்கள் சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை வன்முறை கொண்டு தலிபான்கள் அடக்கிவருகின்றனர்.
கொடூரமான சட்டங்களால் ஆளப்பட்ட கடந்த கால ஆட்சியை போல் அல்லாமல் மிதமான போக்கு கடைபிடிக்கப்படும் என தலிபான்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், இதற்கு நேர் மாறாக மாற்று கருத்து தெரிவிப்பவர்கள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்திவருகின்றனர்.
இதையும் படிக்க | ஆப்கானிஸ்தானை ஆட்டிப்படைக்கும் அந்த ஏழு தலிபான்கள் யார்?
இதனிடையே, காபூல் முழுவதும் தலிபான்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்ட பெண்கள் மற்றும் மனித உரிமைகள் தலிபான்கள் ஆட்சியில் மறுக்கப்படுமோ என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஷரியத் சட்டத்தின்படி, ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடத்தப்படும் என தலிபான்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.