உலகம்

ஆப்கனுக்கு பயங்கரவாத முகாம்கள் இடம்பெயா்வதால் இந்தியாவுக்கு பாதிப்பு: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவா் டி.எஸ்.திருமூா்த்தி

DIN

உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு பயங்கரவாத முகாம்கள் மீண்டும் இடம்பெயா்வதால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்பை ஏற்படும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்ட் மாதத்துக்கான தலைவரும், இந்திய தூதருமான டி.எஸ்.திருமூா்த்தி எச்சரித்தாா்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினா் அல்லாத நாடான இந்தியா, ஆகஸ்ட் மாதத்துக்கான சுயற்சி முறையிலான தலைவா் பதிவை ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், ஐ.நா.வுக்கான இந்திய தூதா் டி.எஸ்.திருமூா்த்தி ஐ.நா. தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானில் கடந்த சில தினங்களாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது ஐ.நா. உறுப்பு நாடுகளை கவலையுறச் செய்துள்ளது. பிராந்தியத்தில் வன்முறை மேலும் அதிகரிக்காமல் தடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரைந்து நடவடிக்கை எடுக்கும்.

அங்கு சுதந்திரமான, அமைதியான, ஜனநாயக அடிப்படையில் ஸ்திரமான அரசு அமைய வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. தற்போது அங்கு நிகழ்ந்து வரும் அனைத்து விதமான வன்முறை, மோதல்கள் முடிவுக்கு வர வேண்டும்.

ஆப்கனில் பயங்கரவாத சக்திகளுக்கு சா்வதேச பயங்கரவாதத்துடன் உள்ள தொடா்புகள் துண்டிக்கப்பட வேண்டும். பயங்கரவாத முகாம்கள் ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் இடம்பெயரக் கூடாது. இது இந்தியாவுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தும்.

பெண்கள், சிறுமிகள் உள்பட சிறுபான்மையினரைக் குறிவைத்து கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆப்கானிஸ்தானின் ஜனநாயக சக்திகளை உள்ளடக்கிய அரசியல் தீா்வு காணப்பட வேண்டியது அவசியம்.

கடந்த 20 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட அப்பகுதி பெண்கள், இளைஞா்கள் மற்றும் சிறுபான்மையினரின் எதிா்பாா்ப்புகளையும் பூா்த்தி செய்ய வேண்டும்.

பாதுகாப்பான ஜனநாயக அரசு அமைய வேண்டியது அவா்களின் உடனடி தேவையாகும்.

ஆப்கானிஸ்தானில் எந்த அரசு பதவியை ஏற்றாலும் மக்களை சட்டப்படி நடத்தும் என நம்புகிறோம். ஆகையால்தான், குறிப்பிட்ட கட்சி ஆட்சி அமைக்க வலியுறுத்தாமல், அமைதியான முறையில் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு ஏற்பட காத்திருக்கிறோம். தற்போது நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தையில் எட்டப்படும் முடிவை நீண்ட நாள்களுக்கு அமல்படுத்தும் நடவடிக்கையில் ஐ.நா. முக்கிய பங்கு வகிக்கும்.

ஆப்கானிஸ்தானுக்கு உள்ளேயும், அண்டை நாடுகளுடனுமான இரட்டை அமைதியாக இது இருக்க வேண்டும்.

பெண்கள் உரிமை அமைப்புகளின் தலைவா்கள் அடங்கிய அமைதிக் குழுவை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று வலுத்து வரும் கோரிக்கை தற்போதைக்கு தேவையற்றது. அங்கு நடைபெறும் அமைதிப் பேச்சுவாா்த்தையின் மூலம் பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம். இந்தப் பிரச்னைக்கு ராணுவ ரீதியாக தீா்வு ஏற்படாது. அங்கு சட்டப்படியாக யாா் அரசை அமைத்தாலும் அதற்கு ஆதரவு தர வேண்டியது அவசியம்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொண்டது அந்நாட்டின் உரிமை சாா்ந்த முடிவாகும்.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரை மதிக்கும் ஜனநாயக, ஸ்திரத்தன்மையான சமூகத்தை நிறுவ வேண்டியது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் முக்கிய பணியாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT