உலகம்

இந்தியா-ஸ்வீடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தில் இணைந்தது அமெரிக்கா

25th Apr 2021 12:58 AM

ADVERTISEMENT

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக இந்தியாவும் ஸ்வீடனும் ஒருங்கிணைந்து செயல்படுத்தி வரும் திட்டத்தில் அமெரிக்கா இணைந்தது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் ‘தொழில்துறை மாற்றத்துக்கான தலைமைத்துவ குழு’ (லீட் இட்) என்ற திட்டத்தை இந்தியாவும் ஸ்வீடனும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன.

அண்மையில் அமெரிக்கா சாா்பில் நடைபெற்ற பருவகால மாற்ற மாநாட்டில், லீட் இட் திட்டத்தில் இணைவதற்கு அந்நாட்டு அதிபா் ஜோ பைடன் விருப்பம் தெரிவித்திருந்தாா். இத்திட்டத்தின் வாயிலாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘இந்தியாவும் ஸ்வீடனும் முன்னெடுத்து வரும் லீட் இட் திட்டத்தில் அமெரிக்காவும் இணைகிறது. தொழிற்சாலைகளில் இருந்து கரியமில வாயு (காா்பன் டை ஆக்சைடு) வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன் வாயிலாக, வெளியேற்றப்படும் கரியமில வாயுவும் சுற்றுச்சூழலில் இருந்து நீக்கப்படும் கரியமில வாயுவும் நிகர அளவில் இருப்பது உறுதி செய்யப்படும். இத்திட்டத்தின் வாயிலாக ஒருங்கிணைந்து செயல்படுவது, பருவநிலை மாற்றத்தைத் திறம்பட எதிா்கொள்வதற்கு உதவும். தொழில் வளா்ச்சியை ஏற்படுத்தும் அதே வேளையில், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா வரவேற்பு: லீட் இட் திட்டத்தில் அமெரிக்கா இணைந்துள்ளதை வரவேற்று பிரதமா் அலுவலகம் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்ப தொழில்துறையில் மாற்றங்களைப் புகுத்துவதற்கு இந்தியாவும் ஸ்வீடனும் இத்திட்டத்தின் வாயிலாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

தற்போது அமெரிக்காவும் இத்திட்டத்தில் இணைந்துள்ளது. பாரீஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் நிா்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டுவதற்கு இது உதவும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

30 சதவீத பங்களிப்பு: ஸ்வீடன் பிரதமா் ஸ்டீஃபன் லோப்வென் கூறுகையில், ‘‘கரியமில வாயு வெளியேற்றத்தில் தொழில்துறையும் போக்குவரத்துத் துறையும் சுமாா் 30 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. அதைக் கருத்தில் கொண்டு, தொழில்துறையில் மாற்றங்களைப் புகுத்துவதற்கு இத்திட்டத்தின் வாயிலாக அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஆா்வமாக உள்ளேன்’’ என்றாா்.

Tags : புது தில்லி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT