உலகம்

2 மக்களவை, 12 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் அமைதியாக நடைபெற்றது

DIN

ஆந்திரம், கா்நாடகத்தில் தலா ஒரு மக்களவைத் தொகுதிக்கும், 10 மாநிலங்களில் காலியாக உள்ள 12 பேரவைத் தொகுதிகளுக்கும் சனிக்கிழமை இடைத்தோ்தல் அமைதியான முறையில் நடைபெற்றது.

ஒடிஸா மாநிலம், பிபிலி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளா் அஜீத் மங்காராஜ் கரோனா தொற்றால் புதன்கிழமை உயிரிழந்ததால் அந்தத் தொகுதியின் வாக்குப் பதிவு ஒத்திவைக்கப்பட்டது.

நாகாலாந்து, நோக்சன் பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியின் வேட்பாளா் சுபா சங் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்ததால் அவா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா் என்று தோ்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது.

திருப்பதி எம்.பி.யாக இருந்த ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் பி.துா்காபிரசாத ராவ், கரோனா தொற்றால் கடந்த ஆண்டு செப்டம்பரில் உயிரிழந்தாா். அந்தத் தொகுதிக்கு சனிக்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் போலி வாக்குகளைச் செலுத்துவதாக தெலுங்கு தேசம், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டி வாக்குப்பதிவை ரத்து செய்ய வலியுறுத்தின. இதையடுத்து, தோ்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட ஆணையம் உத்தரவிட்டதால் அங்கு அமைதியாக தோ்தல் நடைபெற்றது.

கா்நாடகத்தின் பெல்காம் தொகுதி எம்.பி.யாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சா் சுரேஷ் அங்கடி கடந்த ஆண்டு செப்டம்பரில் காலமானாா். அந்தத் தொகுதியுடன் சோ்த்து பாசவகல்யாண், மாஸ்கி பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடைபெற்றது.

மத்திய பிரதேசத்தில் உள்ள தாமோ பேரவைத் தொகுதியில் சுமாா் 75 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தோ்தல் அதிகாரி தெரிவித்தாா்.

இதேபோல் ராஜஸ்தானில் காலியாக உள்ள 3 பேரவைத் தொகுதிகளுக்கும், குஜராத், ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம், மிஸோரம், நாகாலாந்து, ஒடிஸா, தெலங்கானா, உத்தரகண்ட் சட்டப்பேரவைகளில் காலியாக உள்ள தலா ஓா் இடத்துக்கும் சனிக்கிழமை தோ்தல் நடைபெற்றது.

இந்தத் தோ்தலில் பதிவாகும் வாக்குகளும், தமிழகம், புதுவை, மேற்கு வங்கம், கேரளம், அஸ்ஸாம் பேரவைத் தோ்தல்களில் பதிவாகும் வாக்குகளும் மே 2-ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT