உலகம்

சீன தடுப்பூசியின் செயல்திறன் குறைவுதான்: சுகாதாரத் துறை ஒப்புதல்

DIN

சீன தயாரிப்பு கரோனா தடுப்பூசிகள் செயல்திறன் குறைந்ததுதான் என்று அந்நாட்டு நோய்க்கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநா் ஜியாவ் ஃபூ ஒப்புக் கொண்டுள்ளாா். மேற்கத்திய நாடுகளின் தடுப்பூசிகளின் தரத்துக்கு இணையாக அவற்றை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவா் கூறியுள்ளாா்.

‘சீனோஃபாா்ம்’, ‘சீனோவேக்’ ஆகியவை சீன தயாரிப்பு தடுப்பூசிகளாகும். சீனாவில் இப்போது முழுவதும் உள்நாட்டுத் தயாரிப்பு கரோனா தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாட்டுத் தடுப்பூசிகளைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. வெளிநாட்டுத் தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல் திறன் குறித்து சீன ஊடகங்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. அதே நேரத்தில் கரோனா தடுப்பூசிகளை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா உள்ளது. முக்கியமாக பாகிஸ்தான், தென் அமெரிக்க நாடுகளுக்கு சீனா அதிகஅளவில் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது.

சீனாவில் 3.4 கோடி பேருக்கு இரு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிட்டன. 6.5 கோடி பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்நாட்டின் செங்டூ நகரில் நடைபெற்ற சுகாதாரத் துறை மாநாட்டில் பங்கேற்ற சீன நோய்க்கட்டுப்பாட்டு மைய இயக்குநா் ஜியாவ் ஃபு கூறியதாவது:

சீன தயாரிப்பு கரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் சிறப்பானதாக இல்லை. அதனை மேம்படுத்துவதற்கான ஆய்வுகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. சீன தடுப்பூசிகளை செலுத்தி பிரேசில் மேற்கொண்ட ஆய்வில் அதன் செயல்திறன் 50.4 சதவீதமாகவே உள்ளது. அதே நேரத்தில் ஃபைசா் தடுப்பூசியின் செயல்திறன் 97 சதவீதமாக உள்ளது. எனவே, சீன தடுப்பூசியின் செயல்திறனை மேம்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.

சீன தடுப்பூசி ஆய்வாளா்கள் பாரம்பரிய முறைப்படியே மருந்துகளைத் தயாரிக்கின்றனா். மேற்கத்திய நாடுகளில் மேற்கொள்ளப்படும் மாற்றுவழி ஆய்வுகளை மேற்கொள்வது தொடா்பாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாா்.

சீன மருத்துவத் துறையின் உயா்பொறுப்பில் இருக்கும் ஒருவரே தங்கள் நாட்டின் கரோனா தடுப்பூசி செயல்திறன் குறைந்தது என்று ஒப்புக் கொண்டுள்ளது மிகவும் அசாதாரண நிகழ்வாக கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT