உலகம்

டிரம்ப், ஜோ பிடன் நேருக்கு நேர் விவாதம்

29th Sep 2020 04:00 AM

ADVERTISEMENTவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி செவ்வாய்க்கிழமை (செப். 29) நடைபெறவுள்ள முதல் நேரடி விவாதத்தில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் தற்போதைய அதிபர் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் பங்கேற்கின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக இரு கட்சி சார்பிலும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவோர் ஒரே மேடையில் நேருக்கு நேர் பங்கேற்கும் மூன்று விவாத நிகழ்ச்சிகளும், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுவோர் பங்கேற்கும் ஒரு விவாத நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியை அதிபர் தேர்தல் விவாத ஆணையம் நடத்திவருகிறது.

அதன்படி, டிரம்ப் - பிடன் இடையேயான முதல் விவாத நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு (இந்திய நேரப்படி புதன்கிழமை காலை 6.30) ஒஹையோவில் நடைபெறுகிறது. 90 நிமிடம் நடைபெறும் இந்த விவாதத்தில் டிரம்ப்பும் ஜோ பிடனும் பங்கேற்கின்றனர்.

இரு வேட்பாளர்களிடையே அவர்களது சாதனைகள், திட்டங்கள் குறித்து நேரடியாக விவாதம் நடைபெறும். இது நேரலையாக பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது.

ADVERTISEMENT

முதல் விவாதத்தின்போது, அமெரிக்க உச்சநீதிமன்றக்கு புதிய பெண் நீதிபதியை டிரம்ப் பரிந்துரை செய்திருப்பது, பொருளாதாரம், பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் வன்முறை உள்ளிட்டவை குறித்து காரசாரமான விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, அதிபர் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தனது சுட்டுரைப் பதிவில், விவாத நிகழ்ச்சியை முன்னிட்டு ஊக்க மருந்து சோதனைக்கு என்னை உள்படுத்த விரும்புகிறேன். அதேபோல், ஜோ பிடனும் ஊக்க மருந்து சோதனைக்கு உள்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால் அண்மையில் நடைபெற்ற பல விவாதங்களில் அவரது நடவடிக்கை சீராக இல்லை' எனத் தெரிவித்துள்ளார். பிடன் இந்தப் பதிவுக்கு இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. 

இதற்கிடையே, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 70 பேர், விவாதத்தில் பருவநிலை மாற்றத்தையும் விவாதப் பொருளாகச் சேர்க்க வேண்டும் என அதிபர் தேர்தல் விவாத ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT